திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் ஒரு அழகிய இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம். இது மேற்கு தொடர்ச்சி மலைகளை காப்பாற்றும் விதமாக தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகள் வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனியில் இருந்து பெருமாள் மலைப் பகுதிக்கு இடைப்பட்ட காடுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. தங்களது உணவு மற்றும் நீர் தேவைகளுக்காக யானைகள் இடம் பெயர்வது வாடிக்கையான ஒன்றாகும். இதனால் அஞ்சுவீடு, அஞ்சுரான் மந்தை, பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை உள்ளிட்ட பல மலை கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உணவிற்காக சேதப்படுத்தி வருகின்றன.
அதுபோல் மலை கிராமங்களுக்குள்ளையும் போய் வீடுகளை நாசப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நேரங்களில் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிர்ப் பலிகளும் ஏற்படுகின்றன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வழக்கமான வழித்தடங்களில் மட்டுமே யானைகள் இடம் பெயரும். தற்போது பெருகி வரும் கட்டிடங்கள் யானை வழித்தடங்களை மறைத்து கட்டப்படுவதால் இவைகள் எந்தப் பக்கம் செல்வதென்று அறியாமல் ரோடுகள் வழியாக கொடைக்கானல் மலை கிராமங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானல் பழனி பிரதான சாலையில் முகாமிட்டு பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இங்கு முகாமிட்டுள்ள யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகளை வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரத்தை இழந்து காட்டு யானைகள் திக்குமுக்காடி வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்.