
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் துறை ரீதியான மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதனிடம் ஈரோடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரான சாமிநாதனுக்கு ஈரோடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, பத்திரிக்கையாளர் நலன் காக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, சில செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை துறை. இதில் பணிபுரிகிற பத்திரிகையாளர்களின் குடும்பங்களின் நலனை காப்பதும் அரசின் கடமை. இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள், 35 ஆண்டுகள் என வாழ்நாள் முழுக்க பத்திரிகையாளர்களாக பணிபுரிந்து, ஓய்வுபெற்ற, ஒய்வுபெறுகிற பத்திரிக்கையாளர்கள் பலரும் தமிழ்நாட்டில் உள்ளார்கள். இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அரசு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகிறது. மாதம் 10 ஆயிரம் ஓய்வூதியம் என்று வழங்கப்பட்டு வந்ததை திமுக அரசு அமைந்த பிறகு 2000 உயர்த்தப்பட்டு மாதம் 12 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலச் சூழலில், பொருளாதார நெருக்கடியில், வயதான காலத்தில் ஒவ்வொருவரின் குடும்ப தேவைகளுக்கு இந்த தொகை போதுமானதாக இல்லை, ஆகவே, தமிழக அரசு ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு தாராள மனதுடன் உதவும் வகையில் ஓய்வூதிய தொகையை மேலும் அதிகரித்து, ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக பணியாற்றிய பத்திரிக்கையாளர்களுக்கு, பத்திரிகையாளர்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டுள்ள அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளோம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு தமிழகத்தில் பணி புரியும் செய்தியாளர்கள் நலனில் இந்த அரசு அக்கறையோடு செயல்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து தமிழகம் முழுக்க உள்ள செய்தியாளர்களை இந்த வாரியத்தில் இணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் மூலமாக செய்தியாளர்கள் அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரசின் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளிதழ் தொலைக்காட்சி உட்பட செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் மாவட்ட செய்தியாளர்களுக்கு அரசின் அங்கீகார அட்டை (Accreditation card) கடந்த இரு வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை குறிப்பிட்ட சில பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அரசிடம் முறையாக பதிவு செய்து நிர்வாக ரீதியாக செயல்படுகிற வார, வாரமிருமுறை, மற்றும் தினசரி பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

அரசின் விதிமுறைகளின் படி நடைபெற்று வருகிற இந்த செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு பாகுபாடு பாரபட்சம் இல்லாமல் அரசின் செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்க வேண்டும். அதேபோல் அரசின் செயல்பாடுகளை, நலத்திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தாலுக்கா செய்தியாளர்கள். ஆகவே தாலுகா அளவில் பணிபுரிகிற செய்தியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்குவதோடு, பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பயண அட்டை பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
விதிமுறைகளை தளர்த்தி அனைவரையும் நல வாரியத்தில் இணைத்து, அரசின் முழுமையான சலுகைகள் எல்லோருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். செய்தியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இது போன்ற நல்ல செயல்களை மிக விரைவாக அரசு செய்யும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்” எனத் தெர்விக்கப்பட்டுள்ளது.