
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மருத்துவ மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் பிரதான சாலையில் 6 நாய்கள் நேற்று (17.03.2025 - திங்கள்கிழமை) காலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உயிரிழந்த அனைத்து நாய்களையும் அதே பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். அதே சமயம் நாய்கள் விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாய்களுக்குக் கொடிய விஷம் வைத்துக் கொன்றுள்ளனர் எனத் தெரியவந்தது. இதில் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று (18.03.2025) மாலை சிதம்பரநாதன் பேட்டை கால்நடை மருத்துவமனையின் மருத்துவர்கள் மணிமாறன், அறிவுகரசு தலைமையிலான 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் புதைக்கப்பட்ட நாய்களின் சடலத்தை மீட்டு அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின்னர் நாய்கள் இறந்தது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உடற்கூறு ஆய்வின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.