





புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கோயிலூர் கிராமத்தில் உள்ள பழமையான பாலபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு செய்வதில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதோடு குடமுழுக்கு முடிந்த பிறகு நடந்த சாமி தரிசனத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆலங்குடி போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மண்டை உடைந்தது.
இந்த சம்பவங்கள் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் கழற்றிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பிலும் 30க்கு மேற்பட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிலரை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இந்த தகவல் வெளியில் பரவிய நிலையில் மாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனே ஜாமீன் வழங்கி அனுப்பி வைத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் காணாமல் போன ஹார்ட் டிஸ்கை தேடும் பணி தீவிரமாக உள்ளது.