தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச் செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (19). இவர் உப்பளத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்கள் ராமலிங்கம் (21), அழகுராஜா (19), ராமசந்திரன் (22) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள கடைகளில் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது மூவரும் சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், சுரேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிந்ததால், அவர் வெளியே செல்ல பெற்றோர் தடை விதித்துள்ளனர். இதனால் காதலன் சுரேஷ்குமாரை பார்க்க முடியாமல் அந்த பெண் தவித்துள்ளார். இந்நிலையில் காதலனை சந்திக்க ஏற்பாடு செய்வதாக்க கூறி, இளம்பெண்ணை சுரேஷ்குமாரின் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கீழவைப்பார் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணோடு காதலன் 'தனிமை'யில் இருந்ததாக தெரிகிறது. அதன் பிறகு நண்பர்களோடும் 'சேர்ந்து' இருக்குமாறு சுரேஷ்குமார் வற்புறுத்தி உள்ளான். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை 4 பேரும் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண், காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் வந்துள்ளார். அவரின் பரிதாப நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். பின்னர் தப்பியோடிய 4 பேரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.