
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மகளிர் தினமான கடந்த 8ஆம் தேதியன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “அனைத்து பெண்களும் முடிந்தவரை அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரசவங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இந்தச் சலுகை இப்போது அனைத்துப் பிறப்புகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்தார். தற்போது வரை, ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் சம்பளத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்த நேரத்தில், அனைத்து பிரசவங்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஒருவர் வினோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விஷியநகரம் ராஜீவ் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி அப்பலநாயுடு காளிசெட்டி, “ஒரு பெண், மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தையை பெற்றெடுத்தால் அந்த பெண்ணுக்கு எனது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 வழங்கப்படும். அந்த குழந்தை, ஆண் குழந்தையாக இருந்தால் ஒரு பசுமாடு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.