
கள்ளக்குறிச்சி அருகே விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஏற்பட்ட விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வகுமார் (73) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக இன்று காலை பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வகுமார் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஆனது எலவனாசூர்பேட்டை பகுதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விறகு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.
இதில் டிராக்டர் கவிழ்ந்தது. மேலும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகள் சாலை முழுவதும் சரிந்து கொட்டியது. இந்த சம்பவத்தில் செல்வகுமார், அவருடைய தாயார் மற்றும் மருத்துவப் பணியாளர் காயத்ரி ஆகிய மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆம்புலன்ஸை ஓட்டி வந்த அர்ஜுனன் படுகாயத்துடன் தப்பியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.