
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றது. அதே சமயம் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற்றது. அந்த வகையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் நேற்று (09.03.2025) நடைபெற்றது. இதில் 254 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா கைப்பற்றியது. மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றதால், கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிக் வென்ற இந்திய அணி வென்றதால் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மோவ் என்ற இடத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மோவ்வில் உள்ள ஜமா மசூதி பகுதி வழியாக ரசிகர்கள் பேரணி நடத்தினர். அப்போது, அருகில் உள்ள மர்ம நபர்கள் சிலர் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசித் தொடங்கினர். இதனால், இரு குழுவினரிடம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் எரிக்கப்பட்டதாலும், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாலும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்தூர் போலீசார் கலவரம் நடந்த இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு ஏற்கெனவே, ராணுவ முகாம் இருப்பதால், அங்கு விரைவாக ராணுவத்தினர் குவிந்து பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரணியின் போது பட்டாசு வெடிக்கப்பட்டதால் தான் இந்த கலவரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.