Skip to main content

பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு; ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு 

Published on 10/03/2025 | Edited on 10/03/2025
School boy attacked with machete while blocking bus; stir in Srivaikundam

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி செல்லும் வழியில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (17). தனியார் உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம்போல பள்ளிக்கு செல்ல அரியநாயகிபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து ஏறி ஸ்ரீவைகுண்டத்திற்கு மாணவர் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியது.

பேருந்தின் உள்ளே சென்ற அந்த கும்பல் மாணவன் தேவேந்திரனை வெளியே இழுத்து வந்து கையிலிருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பி ஓட மாணவன் முயன்ற நிலையில் துரத்திப் பிடித்து அந்த கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டியது. இதில் தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் மாணவனுக்கு வெட்டுக் காயம் விழுந்துள்ளது.

School boy attacked with machete while blocking bus; stir in Srivaikundam

அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டபடி உடனடியாக ஸ்ரீவைகுண்டம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக தற்போது மாணவனை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

முதற்கட்ட தகவலாக கபடி விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவன் பேருந்தை வழிமறித்து வெட்டப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்