‘அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து..’ என்னும் தலைப்பில் நாளிதழ்களில் செய்தியைப் படிக்கும்போதெல்லாம், டி.வி.யில் பெயர்ந்து விழுந்த சிமென்ட் பூச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம், ‘நம்ம புள்ளைங்க படிக்கிற ஸ்கூல் பில்டிங்கும் அப்படித்தானே இருக்கு..’ என்ற பதைபதைப்பு, தங்களையும் அறியாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோருக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும்.
கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ள விருதுநகர் மாவட்டம் – சித்தலக்குண்டு – திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இரவு நேரத்தில் இது நடந்ததால் யாருக்கும் பாதிப்பில்லை.
119 மாணவர்கள் படிக்கும் இந்த அரசுத் தொடக்கப் பள்ளியில் 5 வகுப்புகள் உள்ளன. 16 வருடங்களுக்குமுன் கட்டப்பட்ட அந்த மூன்று வகுப்பறைக் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்குவதும், மேற்கூரையில் நீர் இறங்கி ஈரப்பதமாவதும், நீர்க்கசிவால் கட்டிடச் சுவரில் வெடிப்பு விழுவதும் நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடத்தைப் பழுது பார்ப்பதற்கான ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர் தொடர்ந்து காலம் தாழ்த்தியதாலேயே, மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சுபாவை தொடர்புகொண்டோம். “கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் நேரில் வந்து பார்த்தார்கள். பள்ளிக் கட்டிடம் பழுதுபார்க்கும் ஒப்பந்தப்பணிக்கு ரூ.13 லட்சம் வரை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், ஒப்பந்தகாரர் வேலையை ஆரம்பித்துவிடுவார் என்றும் தெரிவித்தார்கள்” என்றார்.
நாம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதியிடம் பேசினோம். “அந்த ஸ்கூல் பில்டிங்கை பழுதுபார்ப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.
‘லாபநோக்கம் உள்ள அரசு ஒப்பந்தக்காரர்கள் கட்டும் எந்த ஒரு கட்டிடமும் தரமான கட்டுமானத்துடன் இருப்பதில்லை’ என்ற பொதுவான குற்றச்சாட்டை நிரூபிப்பது போலவே, அரசுக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது.
எந்த ஒரு குறையையும் உடனடியாகச் சரிசெய்து அசம்பாவிதம் நடப்பதற்குமுன் தடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை அரசு அலுவலர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.