தமிழ்நாடு முழுவதும் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரையிலான 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்திட ரூபாய் 33.55 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும் என்றும், வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் அந்த பகுதியில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையில் சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரம் வாய்ந்ததாகவும், வெளிப்பொருட்கள் கலக்காமலும் இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் ருசிப் பார்த்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் சுத்தத்தைப் பராமரித்தல் வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும்-செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு, முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்! இதன் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்! பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும்' என தெரிவித்துள்ளார். அதேபோல் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம் காலை உணவு திட்டம். காலை உணவு திட்டத்தில் கையெழுத்திட்டபொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வாய்க்கு மறுக்கப்பட்ட கோடான கோடி மக்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்குவது திராவிட கொள்கை, கல்வியை பரவலாக்கி அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பது திராவிட கொள்கை. அந்த கொள்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியை திராவிட இயக்கம் கண்டுள்ளதில் பெருமை' என தெரிவித்துள்ளார்.
ஏழைக் குழந்தைகளின்
— M.K.Stalin (@mkstalin) July 27, 2022
வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்!
திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு, முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்!
இதன் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்! பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும்! pic.twitter.com/jInoaASulN