Skip to main content

தாளவாடி காட்டில் "புலி முருகனா?" -இறந்து கிடந்த ஆண் புலியால் பரபரப்பு...!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

முன்பெல்லாம் சத்தியமங்கலம் காட்டில் நடந்து செல்வதென்றால் காட்டு யானைகளை கண்டுதான் பயம் ஆனால் இப்போது சிறுத்தைகளும், புலிகளும் பெருகிவிட்டன. ஆதிவாசிகள், மலை மக்கள் கூட புலி நடமாட்டத்தால் முந்தைய காலத்தைப்போல் சர்வ சாதாரணமாக காட்டுக்குள் செல்ல முடியாத அச்சத்தில் தான் உள்ளார்கள்.

 

sathyamangalam forest tiger


யானைகள், காட்டெருமைகள், கரடிகள், செந்நாய்களை காட்டுக்குள் கண்டால் அதன் போக்கிலேயே விரட்டி விட்டு தப்பித்து வருவார்கள். தற்போது சில வருடங்களாக சிறுத்தை மற்றும் புலிகளையும் காட்டை நன்கு பழகிய ஆதிவாசிகளால் விரட்ட முடிகிறது என நம்பிக்கையோடு கூறுகிறார்கள் மலை வாசிகள் சிலர். மேலும் சிலர் எதிர்தாக்குதலில் புலி ஈடுபட்டால் புலி முருகன் திரைப்படத்தில் வருவது போல புலியை கொன்று வெற்றி பெற்று உயிர் தப்பவும் முடியும் என்கிறார்கள்.

இந்தநிலையில் தான் மர்மமான முறையில் ஒரு ஆண் புலி இறந்து கிடந்துள்ளது. சத்தியமங்கலம் மலையில் ஆசனூர் வனக் கோட்டத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட கோடம்பள்ளி தொட்டி என்ற வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர்.  அப்போது வனப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. வனவிலங்கு ஏதாவது இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர் தேடிப் பார்த்தபோது கவிபசப்பா பள்ளத்தில் ஒரு ஆண் புலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

sathyamangalam forest tiger

 

இது குறித்து  மாவட்ட வன அலுவலர் நாயுடுவிற்கு தகவல் கொடுத்தனர். பிறகு உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஈரோடு வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆண் புலியின் உடலை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இறந்த புலியின் பல் மற்றும் கால் நகம், தோல் என எல்லாமும் இருந்துள்ளது. எனவே இது வேட்டையில் கொல்லப் படவில்லை என உறுதி செய்தனர். 

உடல் நலக்குறைவு காரணமாக புலி இறந்ததா? அல்லது காட்டுக்குள் நடமாடிய ஆதிவாசியை புலி தாக்க முயன்றதால் ஏற்பட்ட மோதலில் புலி கொல்லப்பட்டதா...? அப்படியென்றால் புலியை கொன்ற புலி முருகன் இங்கு யார் அவர், எங்கு இருப்பார் என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள். இறந்த புலியின் உடல் அதே வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.
 

பிறகு பாதுகாப்பாக தோட்டாக்களை வெடித்துக் கொண்டு துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் அந்த அடர்ந்த காட்டை விட்டு வெளியேறும் போது புதர் மறைவில் சில புலிகள் இருந்ததும் கோபத்துடன் உர்... உர்.. ரென கத்தியிருக்கிறது.

 


          



 

சார்ந்த செய்திகள்