கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இமையம் என்கிற அண்ணாமலை. இவர் ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங்கத’, ‘செல்லாத பணம்’, ‘பெத்தவன்’, ‘வாழ்க வாழ்க’ போன்ற நாவல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ‘நறுமணம்’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘மண்பாரம்’, ‘நன்மாறன்’, ‘கோட்டைக்கதை’, ‘சாவுச்சோறு’, ‘கொலைச்சேவல்’ போன்ற சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
இவர் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக, இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள இமையத்திற்கு, சாகித்ய அகாதமி சார்பில் தாமிரப் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இமையத்தின் படைப்புகள் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டுபவை.
எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் பச்சை மொழியின் ஈரம் உலராமல் எடுத்துக்காட்டுபவை. சமூகக் கொடுமைகளை எடுத்துக் கூறி வாசிப்பாளர்களின் மனங்களில் ரெளத்திரத்தை ஊட்டுபவை. சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ள எழுத்தாளர் இமையம், கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திட்டக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தி.மு.க வேட்பாளருமான வெ.கணேசனின் உடன்பிறந்த சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது .