Skip to main content

மழைநீர் கடலில் வீணாவதைத் தடுக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

rain water tn govt chennai high court

 

மழைநீரை முறையாகப் பயன்படுத்தாமல் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பதற்கு, சிறப்பு கவனம் செலுத்த நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், ‘கடந்த 2015- ஆம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் கழித்து, சென்னையில் மீண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது. இதற்குக் காரணம்,  நிலத்தடி நீர் முறையாக சேமிக்கப்படவில்லை.

 

தற்போது,  (சமீபத்தில்) பெய்து வரும் மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் நேரடியாக கடலுக்குச் சென்று வீணாகிறது. மழைநீரை முறையாகப் பயன்படுத்தாமல், கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும், அதேபோல மழை நீரோடு கழிவுநீர் கலந்து செல்வதையும் தடுக்க முடியவில்லை. அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தப் பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு அறிவுறுத்தியதோடு, நான்கு வாரத்திற்குள் நிபுணர் குழுவை அமைத்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்