விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்சி மங்கலம் எனும் கிராமத்தில் ஆட்டோ மீது மின் கம்பம் விழுந்து ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள விழுப்புரம் மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ, “விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கொஞ்சி மங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளது.
மின் கம்பங்கள் பழையதாக உள்ளதால் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவில் உள்ளது. கிளியனூர் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை விவசாயிகள் புகார் தெரிவித்தும் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றவில்லை.
இந்நிலையில், இன்று கொஞ்சி மங்கலம் கிராமத்தில் இருந்து பழைய கொஞ்சி மங்கலம் கிராமத்திற்கு வேலையாட்களை அழைத்து வர ஆட்டோ செல்லும்போது சாலையோரம் ஆபத்தான நிலையில் சாய்ந்து கொண்டிருந்த மின் கம்பம் திடீரென முறிந்து அந்த ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொஞ்சி மங்கலம் வி.ஏ.ஓ. நேரில் பார்வையிட்டார். மேலும், மின்சார ஊழியர்கள், முறிந்துவிழுந்த மின்கம்பத்தை அகற்றினர்.
இதேபோல், மீண்டும் விபத்து நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், கொஞ்சி மங்கலம் பொட்டியில் இருந்து பழையூர் எடச்சேரி செல்லும் வழியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் மின்கம்பங்கள் பழுதடைந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்தவாறு மின்கம்பங்கள் உள்ளது.
சாய்ந்துகொண்டு உள்ள இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்து இனியாவது கிளியனூர் மின்சாரத்துறை அதிகாரிகள் பழைய கம்பங்களை மாற்றிவிட்டு புதிய கம்பங்களை நட்டு விபத்துக்கள் நடக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொஞ்சி மங்கலம் பகுதியில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லையென்றால் கிளியனூர் மின்சாரத் துறையை கண்டித்து விரைவில் வானூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மின்சார அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.