சென்னையில் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக முழு தீவிர ஊரடங்கு பிறபிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், இணைய வகுப்புகள் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில், ''மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மீது சைபர் கிரைம் எஸ்.பி நிலையிலான அதிகாரி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்கள் உருவாக்க வேண்டும். இணையவழியில் நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்யப்படவேண்டும். பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இரண்டு பேர் கொண்ட குழு ஆன்லைன் வகுப்பு பதிவை ஆய்வு செய்ய வேண்டும்" என ஆணையிட்டுள்ளார்.