தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய பாலங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் பறக்கும் உயர்மட்ட பாலமானது திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்க்கெட் வரை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைத்தால் கன்டோன்மெண்ட் அருகே உள்ள முத்தரையர் சிலையை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
முத்தரையர் சிலையை வேறு இடத்தில் மாற்றியமைக்கக் கூடாது என வீர முத்தரையர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு ஏற்று புதிய திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்று வீர முத்தரையர் சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் கண்டோன்மெண்ட் முத்தரையர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது அடையாளத்தை அழிக்கக் கூடாது எனவும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.