பொது இடங்களில் எச்சில் துப்புவது, புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட தடைச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த மனுவில், கரோனா பரவி வரும் இந்த நேரத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புவது, புகை பிடிப்பது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட தடைச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் இந்தச் சட்டங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றால், தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வெளிநாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.