Skip to main content

"தமிழ்நாட்டை வறுமை இல்லாத மாநிலமாக உருவாக்குவதே லட்சியம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

"The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment! "The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment!

 

தமிழ்நாட்டை வறுமையே இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (டிச. 11) விமானம் மூலம் சேலம் வந்தார். 

 

சீலநாயக்கன்பட்டியில் நடந்த விழாவில், 30,837 பயனாளிகளுக்கு 168.64 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 

 

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "சேலத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நிகழ்ச்சி, எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது என்ன அரசு விழாவா அல்லது அரசாங்கமே விழாக்கோலம் கொண்டிருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. 

 

இந்த நிகழ்ச்சிக்கு, குறிப்பாக இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய அமைச்சர் நேரு, முன்நின்று அவருடைய மேற்பார்வையில் இம்மாவட்டத்தின் ஆட்சியர், அரசு அலுவலர்கள் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

"The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment! "The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment!

அமைச்சர் நேருவைப் பற்றி பல நேரங்களில், அதிலும் திருச்சியிலே நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் அவரைப் பற்றி கூறும்போது அவர், தீரர்கள் உருவாக்கிய ஒரு வீரராக, அந்தக் கோட்டத்தினுடைய தளபதியாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடியவர். 

 

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதனை சாதாரண வெற்றியல்ல, மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெறக்கூடிய அளவிற்கு நேரு அந்தக் காரியங்களை ஆற்றுவது உண்டு. அப்படி ஆற்றியிருக்கக் கூடிய அந்தப்பணி, இப்போது சேலத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. 

 

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இந்த சேலம் மிகப்பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கிறது. பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானம், அண்ணாத்துரை தீர்மானம் என்று தலைப்பிட்டு வந்த தீர்மானம். அதுதான் நீதிக்கட்சியானது. திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றதும் இந்த சேலம் மாநகரில்தான். இதையெல்லாம் தாண்டி இன்னொரு மகத்தான பெருமையும் சேலத்திற்கு உண்டு. 

 

தமிழினத் தலைவர் நம்முடைய கலைஞர், சில ஆண்டு காலம் வாழ்ந்த ஊர்தான் இந்த சேலம். 1949&50 ஆம் ஆண்டுகளில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில்தான் தலைவர் கலைஞர், வாழ்ந்து வந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால் நான் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறேன். அதுதான் எனக்குப் பெருமை. 

 

இத்தனை பெருமைகள் இருந்தாலும், நான் முதலமைச்சராக வந்திருக்கக் கூடிய இந்த நேரத்தில் நம் வீரபாண்டியார் இன்று இல்லையே என்ற ஏக்கம், வருத்தம் என்னுடைய உள்ளத்தில் பதிந்திருக்கிறது. 

 

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த காலங்களில் சேலம் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சேலம் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூரில் அண்ணா அரசு கல்லூரி, சேலம் மாநகராட்சியில் 283 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களைச் சொல்லலாம். 

"The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment! "The ambition is to make Tamil Nadu a poverty-free state" - Chief Minister MK Stalin's commitment!

இந்த வரிசையில் இதை விட அதிகமான சாதனைகளைச் செய்து கொடுப்பதற்கு தி.மு.க. ஆட்சி தயராகிக் கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்ச்சி. 

 

மாமலை பணியானாலும் அதை சிறுகடுகாக நினைத்து எல்லோரையம் ஒருங்கிணைத்து திறம்படச் செய்து காட்டும் வல்லமை அமைச்சர் நேருவுக்கு உண்டு. ஆகவேதான் அப்படிப்பட்ட ஒரு ஆற்றலாளரை தேர்ந்தெடுத்து சேலம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமித்திருக்கிறோம். 

 

நேரு வந்தார்... நேரு வென்றார் என்று பெயர் எடுக்கப் போகிறார். நேருவுக்கு நிகர் நேருதான் என்று நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். 

 

இந்த ஒரு மாத காலத்தில் அவர் இந்த மாவட்டத்தில் செய்திருக்கின்ற பணிகளை அடுத்த ஓராண்டு காலத்திற்கு தொடர்ந்தால்... ஒரு மாதத்தில் ஆற்றியிருக்கக் கூடிய பணிக்கே இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. இன்னும் ஓராண்டுக்கு என்னென்ன செய்யப் போகிறார் என்னென்ன நிறைவேற்றப்படும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

 

அவரை பொறுப்பாளராக அறிவித்ததும் இந்த மாவட்டம் முழுக்க முழுக்க சுற்றிச் சுழன்று மக்கள் குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்று, முகாம்களை நடத்தி தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் உள்ளிட்ட 16 வட்டங்களில் மக்களைச் சந்தித்து அவர் மனுக்களைப் பெற்றிருக்கிறார். அதாவது 35,217 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

 

இந்த மனுக்களின் மூலமாக உங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் எங்களிடம் வந்து சேர்ந்துள்ளன. இதில் 10,623 மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மற்ற மனுக்கள் அரசுத்துறைகளின் மேல் விசாரணையில் உள்ளன. 

 

ஆனால், உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை அரசின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இப்போது எங்கு சென்றாலும் எந்த வழியாகச் சென்றாலும் முதல்வராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பு தருகின்றனர். அவர்கள் முகத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு தெம்பு வருகிறது. ஏற்கனவே ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியலை அதிகம் பேச விரும்பவில்லை. பேசவும் தேவை இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. 

 

நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுவிட்டோம். நாம்தான் ஆட்சி என்ற நிலை வந்ததற்குப் பிறகு, அந்த வெற்றியை நம்முடைய கலைஞரின்  நினைவிடத்திற்குச் சென்று, நான் அங்கே வணங்கி வெற்றி பெற்ற செய்தியை சொல்லச் சென்றபோது, பத்திரிகை நண்பர்கள் மக்களுக்கு என்ன செய்தியை சொல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். ஒரே வரிதான் சொன்னேன். இந்த ஆட்சி வர வேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல; நமக்கு வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி என்று நான் சொன்னேன். 

 

அதனால்தான் கடந்த தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற வேண்டும். அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து 100 நாள்களில் அந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதன் மூலமாக பெறப்பட்ட மனுக்களில் இதுவரைக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான மனுக்கள், அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். 

 

அதனால்தான் தலைவர் அவர்கள் நம்மைப் பயிற்றுவிக்கும்போது சொன்னார்... சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்பது கலைஞருடைய வாசகம். 30,837 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர ஒரு மகிழ்ச்சியான விழாவாக நல்ல நிகழ்ச்சியாக இது நடந்து கொண்டிருக்கிறது.

 

இப்படி ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படும் அரசாக தமிழக அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனிமனிதனின் வாழ்க்கை மேம்பாடுதான், ஒரு மாவட்டத்தினுடைய வளர்ச்சி. அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனின் கவலையையும் தீர்ப்பதை எங்களது கடமையாக நாங்கள் கொண்டுள்ளோம். 

 

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறோம். இன்று மட்டும் 1242 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை சேலம் மாவட்டத்திற்கு நான் அறிவிக்கப் போகிறேன். அதில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்...

 

சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 530 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். சுமார் 520 கி.மீ. தூரத்திற்கு பாதாளச் சாக்கடைகள் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்படும். சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் 158 கோடி ரூபாய் செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 

 

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி ஆகிய நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக 69 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அம்மாபேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பற்காக நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். 

 

சேலம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக 20 கோடி ரூபாயில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் 20 கோடியில் மேம்படுத்தப்படும். 

 

தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா விரைவில் அமைய உள்ளது. கொலுசு உற்பத்தியில் தலைச்சிறந்து விளங்கக்கூடிய மாவட்டம் சேலம். நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் 25 கோடி ரூபாயில் தொடங்கப்படும். 

 

இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா விரைவில் தொடங்கப்படும். இந்த உறுதிமொழிகளை எல்லாம் முதல்கட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல திட்டங்கள் படிப்படியாக வர இருக்கின்றன. 

 

சமர்ச்சீர் வளர்ச்சியைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமச்சீர் வளர்ச்சி வர வேண்டுமென்றால் சம உரிமை கொடுக்கக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கித் தர வேண்டும். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டங்களை தீட்டி நாங்கள் தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். வறுமை குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சுட்டிக்காட்டப்பட்டது. 

 

பேரறிஞர் அண்ணாவும் நம்முடைய கலைஞரும் ஆட்சிக்கு வந்தபிறகு, நிறைவேற்றப்பட்ட சமூகநலத் திட்டங்கள்தான் இதற்குக் காரணம். இது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் அந்தப் புள்ளிவிவரம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 

 

வறுமையை முழுமையாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பசி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வறுமையே இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. அத்தகைய சூழலை உருவாக்கத்தான் இந்த அரசு முழு முயற்சியோடு களத்தில் இருக்கிறது. 

 

ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு என்று கலைஞர் சொல்வார். அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு, நான் நித்தமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வை நான் என்றைக்கும் விரும்பியது கிடையாது. மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். உழைத்துக் கொண்டே இருப்பேன்." இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எ.வ.வேலு, முத்துசாமி, எம்பிக்கள் பார்த்திபன், பொன்.கவுதம சிகாமணி, கேஆர்என்.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் வழக்கறிஞர் ராஜேந்திரன், அருள், சதாசிவம், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்