Skip to main content

‘சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்க’ - பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்..!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

farmers.jpg

 

நாட்டை உலுக்கிய சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, விவசாயிகளால் நிராகரிக்கப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும் இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் அனீஸ் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து, இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘உழவர் சார்பு’ என்று ஊடகங்களில் ஒரு பகுதியினர் சித்தரித்திருந்தாலும், விவசாய அமைப்புகள் இந்த முடிவை திட்டவட்டமாக நிராகரித்தன என்பதே உண்மை.

 

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் உழவர் அமைப்புகளுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், நான்கு உறுப்பினர்களும் மசோதாவை ஆதரிப்பவர்களாக அறியப்படுகிறார்கள். மேலும் இவர்கள் அரசு ஆதரவு நபர்களாகவும் உள்ளனர். எனவே அந்தக் குழுவின் அறிக்கை விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீதிமன்ற உத்தரவில் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் எந்த அம்சமும் இல்லை. ஆதலால் அவர்கள் அமைதியான ஜனநாயக ஆர்ப்பாட்டங்களைத் தொடர முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னர் குடியுரிமைச் சட்ட போராட்டங்களில் நடந்துகொண்டதைப் போல், நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டங்களை மத்திய அரசாங்கம் வன்முறை கொண்டு நிறுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

 

பாப்புலர் ஃப்ரண்ட் விவசாயிகளுக்குத் தனது ஆதரவை உறுதிப்படுத்துவதுடன் நாடு முழுவதும் விவசாயிகளால் நிராகரிக்கப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய  மசோதாகளை அரசாங்கம் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறது. நாட்டின் அமைதியான சமூகம், மற்றொரு அமைதியான ஜனநாயக போராட்டத்தை தோல்வியடைய அனுமதிக்கக்கூடாது. விவசாயிகளை வலுக்கட்டாயமாக அடக்குவதற்கு மத்திய அரசு எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் எதிராக நாடு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்