தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அப்போது அவர், 31 சதவீத மக்கள்தான் நரேந்திர மோடிக்கு வாக்களித்தார்கள். 61 சதவீத மக்கள் நரேந்திர மோடிக்கு வாக்களிக்கவில்லை. இதனை அவர் மறந்தாலும், நாம் மறந்துவிடக் கூடாது. அவரை யாரும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கவில்லை. அவருடைய கட்சிக்கு 282 இடங்கள் தந்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 31 சதவீத வாக்குகள் பெற்று குறிப்பாக வடமாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பெரிய வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
தான் ஆட்சிக்கு வந்ததும் ஒரே மாதத்திலே பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணங்களை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரா? இல்லையா? இளைஞர்களிடம் ஆட்சிக்கு வந்ததும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறேன் என்று சொன்னாரா? இல்லையா? இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்கள். பக்கோடா செய்வது அருமையான வேலை என்று கண்டுபிடித்தவர் நரேந்திரமோடி.
சொல்லாத ஒன்றை அவர் செய்தார். பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்தபோது, மணமதிப்பிழப்பு செய்வேன் என்று சொன்னாரா? சொல்லியிருந்தால் ஓட்டு போட்டியிருப்பீர்களா?
ஜி.எஸ்.டி.யை எதிர்க்கிறோம் என்றார்கள். தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை முறியடிப்போம் என்றார்கள். ஜி.எஸ்.டி. வரியை முன்மொழிந்தது நான்தான். ஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம். உலகின் பல நாடுகளில் இந்த கொள்கை இருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்று சொன்னது நான்தான். ஜி.எஸ்.டி. என்ற நல்ல கொள்கையை குரங்கு கையில் பூமாலை கொடுத்த மாதிரி இவர்கள் கையில் கொடுத்த பிறகு, அதனை சிதைத்து எத்தனை சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. முட்டாள்தனமான முடிவுகள். இந்திய பொருளாதாரத்தை பத்து ஆண்டுகளுக்கு பின்தள்ளிய மிகப்பெரிய குற்றத்தை செய்தது பாஜக அரசு. இவ்வாறு பேசினார்.