மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவிற்கு செனட் சார்பில் ஆனந்தகிருஷ்ணனை தேர்வு செய்த பதிவாளரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைகழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைகழக ஆங்கிலதுறை தலைவரும்,செனட் உறுப்பினருமான கலைச்செல்வன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், " மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தராக இருந்த செல்லத்துரையின் நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து செல்லத்துரை பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் பல்கலைகழக புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
இந்த தேடுதல் குழுவில் பல்கலைகழக வேந்தர் சார்பில் ஒரு நபரையும், பல்கலைகழக சிண்டிகேட் சார்பில் ஒரு நபரையும், செனட் குழு சார்பில் ஒரு நபரும் நியமிக்கபட வேண்டும். இந்நிலையில் செனட் குழு சார்பில் ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். தேர்தல் நடத்தி செனட் உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து தேடுதல் குழுவில் நியமிக்க வேண்டும்.ஜூலை 25 ல் தேர்தல் நடக்கும் என ஜூன் 22 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட நான்கு பேர் வேட்புமனு தாக்கல் செய்து வேட்புமனு ஏற்றுகொள்ளபட்டது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சோமசுந்தரம் தனது மனுவினை வாபஸ் பெற்று கொண்டார். அதில் மற்ற மூவருக்கும் போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் செனட் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் செனட் உறுப்பினர்கள் சார்பில் பல்கலைகழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம் பெறுவதற்கு டாக்டர் அனந்தகிருஷ்ணன் தேர்வு செய்யபட்டிருப்பதாக தெரிவிக்கபட்டது. இந்த தகவல் செனட் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் நடைபெறாமல், அனைவரின் ஒப்புதல் இல்லாமல் தேடல் குழுவிற்கு செனட் சார்பில் ஒருவரை எப்படி நியமிக்கலாம். எனவே செனட் உறுப்பினர்கள் சார்பில் பல்கலைகழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம் பெறுவதற்கு பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தேர்வு செய்ய பட்டிருப்பதாக பல்கலைகழக பதிவாளரின் உத்தரவுக்கு இடைகால தடைவிதித்து, ஜூன் 22 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணைபடி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது , "தேர்தலுக்கு நான்கு மனுக்கள் ஏற்றுகொள்ளபட்ட நிலையில் ஒருவர் மனுவினை வாபஸ் பெற்றார். மீதமுள்ள மூவரில் இருவரின் மனுக்களை தகுதியின் அடிப்படையில் நிராகரித்து விட்டோம். இறுதியாக டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் என்பவரை தேடல் குழுவிற்கு தேர்வு செய்தோம் என பல்கலைகழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இந்த தேடல் குழுவிற்கு அனந்தகிருஷ்ணன் தேர்வு செய்யபட்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நடத்தாமல் தேர்வு செய்திருப்பது ஏற்புடையது இல்லை கூறி மனுதாரர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைகழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கினை ஆகஸ்டு 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.