வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தாய் தந்தை இல்லாதவர். தனது சகோதரி வீட்டில் உள்ளார். அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி ஜானகிராமன் கீதாவை தன் வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்க செய்துள்ளார்.
![vellore](http://image.nakkheeran.in/cdn/farfuture/yo5n3Z1NengMf2pPqmJEYVpz5O1m4ueLdAj2C3eoclQ/1555152767/sites/default/files/inline-images/veloore.jpg)
இதனை தொடர்ந்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் பல முறை அவரை தொடர்பு கொண்டு கீதா வற்புறுத்தியுள்ளார். இதை சற்றும் பொருட்படுத்தாமல் உன்னை என் தாய் மற்றும் தங்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கீதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளார். இதை அறிந்த கீதாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு கீதாவை அழைத்து வந்து கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி புகார் கொடுத்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி விசாரிப்பதாக கூறி பலமுறை இவர்களை திருப்பி அனுப்பி உள்ளார் இரண்டு மாத காலமாக இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் கீதாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யும்படி வலியுறுத்தியதன் பேரில் இதற்கான வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாகவும் நீங்கள் சென்று நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி கூறியுள்ளார்.
இதை அறிந்த கீதா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் ஜானகிராமன் முன்ஜாமீன் பெற்று விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்ததால் ஜானகிராமன் வீட்டு முன்பு ஏப்ரல் 13-ம் தேதி சென்று தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனை கேள்விப்பட்டு உமராபாத் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் கீதா, இதே வீட்டில் பலமுறை அவரை பலாத்காரம் செய்ததாகவும், அவரை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதார்.
அவரை சமாதானம் செய்துவிட்டு போலீஸார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஜானகிராமன் இல்லாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் தர்ணாவை முடிக்காமல் அங்கேயே உள்ளார்.