Skip to main content

‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு விழா

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளுக்கு செவ்வாயன்று (ஜன.4) சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், கலை இயக்குநர் கதிர், இசையமைப்பாளர் சேன் ரோல்டன், கலைஞர்கள் மணிகண்டன், தமிழரசன், பவாசெல்லத்துரை, இரா.காளீஸ்வரன், களப்போராளிகள் பார்வதி ராஜாகண்ணு, முதனை ஆர்.கோவிந்தன், ஆர்.ராஜ்மோகன், வழக்கறிஞர் அ.சந்திரசேகரன் ஆகியோரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். நிகழ்வுகளை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஒருங்கிணைத்தார்.

 

இந்த நிகழ்விற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார்.மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், டி.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து நன்றி கூறினார்.

 

திரைத்துறையில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை அரசியலிலும் நிகழும் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்


மார்க்சிய சிந்தனை நம்மிடம் மட்டுமல்ல கலைஞர்களிடத்தில் வலுவாக ஊன்றி உள்ளது. கட்சி ஊழியர்களாக ராஜாக்கண்ணு கொலை வழக்கு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினோம். ஆனால், தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய எழுத்தறிவு இல்லாத குறவர் சமூகத்தை சேர்ந்த பார்வதி அதிக பாராட்டுக்குரியவர். வாச்சத்தி போராட்டம் 18 ஆண்டுகள், அண்ணாமலை நகர் காவல் நிலைய மரண வழக்கு போராட்டம் 16 ஆண்டுகள் என நடந்தன. சின்னாம்பதி, நாலுமூலை கிணறு என மனித உரிமை பாதிக்கப்பட்ட இடத்திற்கு முதலில் சென்று குரல் கொடுக்கும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சனை வரும்போது தொடக்கத்தில் வந்து போஸ் கொடுத்துவிட்டு காணாமல் போகிறார்கள். வெற்றி பெறும் வரை போராடுகிற இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை பதிவு செய்தால் பெரும் வரலாறாக இருக்கும். 1993-96 கட்டத்தில் கடலூரில் 4 வழக்கை கட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது 2 காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் குண்டு வைத்தாக கைது செய்தார்கள். காவல்நிலைய சித்தரவதைகள், தாக்குதல்கள், பொய்வழக்குகள், கொடுமைகள் என பல சோதனைகளை கடந்து வழக்குகளில் வெற்றி பெற்றோம். காவல்துறையில் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை; குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள் என்றுதான் போராடுகிறோம்.


ராஜாகண்ணு வழக்கில் வழக்கறிஞர் சந்துரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தார். ராஜகண்ணு, நந்தகோபால் உள்ளிட்ட காவல்நிலைய கொலை வழக்குகளில் அரசு வழக்கறிஞராக தோழர் வெங்கட்ராமன் 16 ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றார். ராஜாகண்ணு வழக்கில் உடல், உடற்கூராய்வு சான்றிதழ் இல்லாதபோது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு போராட்டத்தை படமாக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ‘ஜெய்பீம்’ படத்தை பாராட்டுகிறோம். அடித்தட்டு மக்களின் நீதிக்கான போராட்டம், மக்களை விழிப்படையச் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மிரட்டுகிறார்கள்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் வரும்போது தடைவிதிக்கிற, இடையூறு செய்யும் மிரட்டல் அரசியலில் யார் ஈடுபட்டாலும் எதிர்த்து களப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.


உலகமே திரும்பி பார்க்கும் தலைசிறந்த படங்களின் வரிசையில் ஜெய்பீம் இடம் பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில் சில படங்கள் கருத்தியலாக சரியாக இருக்கும் வணிகத்தில் தோற்றுவிடும். வணிகத்தில் வெற்றி பெற்ற படங்களின் கருத்தியலாக தோற்று இருக்கும். கருத்தியல் மற்றும் வணிக ரீதியாக ஜெய்பீம் வெற்றியடைந்துள்ளது. சிபிஎம் போராட்டத்தை, அநீதியை எதிர்த்த போராட்டத்தை படமாக்கியதற்காக மட்டும் பாராட்டவில்லை. சமூகத்தில் இருப்பவர், இல்லாதவர் என்கிற வர்க்க சமுதாயம், ஆள்பவர், ஆளப்படுபவர் என்கிற அதிகார சமூகம், மேல்சாதி, கீழ்சாதி என்று செங்குத்தாக மக்களை பிரித்துள்ள சாதிய சமூகம், ஆணாதிக்கம் போன்ற பாலின வேறுபாடு மிகுந்த சமூகத்தில் கலைஞன், சினிமா, அடித்தட்டு மக்களின் பக்கம் நிற்பதால் பாராட்டுகிறோம். கதை, நடிப்பு, இசை என அனைத்து வகையிலும் படம் சிறப்பாக உள்ளது.


“கேரளாவில் இடதுசாரி இயக்கம் வலிமையாக உள்ளது. அங்கு கூட இடதுசாரி, மார்க்சிஸ்ட் கட்சி கருத்துக்களை பகிரங்கமாக காட்டும் நிலை உருவாகவில்லை. ஜனநாதன் படங்கள், ஜெய்பீம் படம் போன்றவற்றை பார்க்கும்போது, தமிழ்த் திரையுலகம் வேகமாக மாறியிருக்கிறது; முன்னேறி இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தெரிவித்தார். இதுபோன்ற படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் செய்த திரைக்கலைஞர் சூர்யா, கட்சியின் கோரிக்கையை ஏற்று பார்வதிக்கு 15 லட்சம் ரூபாயையும் கொடுத்தார். அந்த பணத்தை கூட அவரே நேரடியாக பார்வதியிடம் கொடுக்கவில்லை. திரைப்படம் உருவாக, பார்வதிக்கு நீதி கிடைக்க, படம் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கட்சித்தான் காரணம். எனவே, காசோலையை பார்வதிக்கு நீங்கள்தான் (மாநிலச் செயலாளர்) தர வேண்டுமென்று நமது கையாலேயே கொடுக்க வைத்தார்.


தமிழகத்தில் மிகச்சிறந்த இயக்குநராக மிளிர்ந்துள்ள ஞானவேல் இவ்வளவு நாளாக வெளியே தெரியாமல் எப்படி இருந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டமாக இருந்தால்கூட, செங்கொடியை காட்டாமல் கூட எடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல், நேர்மையாக படத்தை பதிவு செய்துள்ளார். வங்கத்தில் சத்தியஜித்ரே போன்று தமிழகத்தில் ஞானவேல் உருவாகிறார். ஜனநாதன் படங்களை தொடர்ந்து அசுரன், பரியேறும் பெருமாள், மாநாடு, ஜெயில், ஆன்டி இண்டியன், ஜெய்பீம் என தமிழ்ச் சினிமா மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது. திரைத்துறையினர் கேமிராவை மக்கள் பிரச்சனைகள் பக்கம் திருப்பியுள்ளனர். இது திரைத்துறையில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை மட்டுமல்ல, இந்தியாவில், தமிழகத்தில் இடதுசாரி வலுவடைகிற இயக்கமாக பரிணமிக்கும். சினிமா அடித்தட்டு மக்களுக்காக என்ற திசையில் வளர வேண்டும். மதவெறி சக்திகளை முறியடிக்க மார்க்சியத்தை முன்னெடுக்கிறோம். அதேநேரத்தில் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை உள்வாங்கி செயல்படுவோம். ஞானவேலின் பயணம் வெற்றியடையட்டும். மாற்று தயாரிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.


போராட்ட அத்தியாங்கள் நிரம்பிய கம்யூனிச இயக்கம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் 


‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேலை கட்சியின் அரசியல் தலைமைக்குழுவே பாராட்டியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் வீர வரலாறு நீண்ட காவியம். 1950இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1968ஆம் ஆண்டு கீழ்வெண்மனியில் 44 தலித் மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். தீண்டாமை கொடுமை, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடிய களப்பால் குப்பு சேலம் சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டார். வாச்சாத்தி வழக்கில் 269 வன, வருவாய், காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது செங்கொடி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்ட அத்தியாயத்தில் ஒன்றை திரைப்படமாக பதிவு செய்த இயக்குநர் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி.


திரைப்படம் வெளியான பிறகு, பாமக கடுமையாக தாக்கியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போது பேசிய இயக்குநர் ஞானவேல், “10, 15 நாட்களாக படாதபாடு படுகிறோம். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் வாழ்நாளெல்லாம் எப்படி போராடுகிறீர்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். குற்றம் செய்தவர்களின் சாதி அடையாளத்தை பதிவு செய்துள்ளது போல், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களின் சமூகத்தை ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர், “பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுகிறவர்களை கம்யூனிஸ்ட்டாக காட்டியுள்ளேன். ஒருவர் இடதுசாரியாக மாறும் போது, அவரிடமிருந்து சாதி உள்ளிட்ட அடையாளங்கள் அற்றுவிடுகிறது” என்று குறிப்பிட்டார். நமது தத்துவத்தை எளிமையாக புரியும் படி காட்சிப்படுத்தியுள்ளார்.
ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் ஒரு பேட்டியில், “கம்யூனிஸ்ட்டுகளின் மன உறுதியை கண்டு வியந்து போனேன். அவர்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம்தான் அவர்களுக்கு மன உறுதி தருகிறது. நாமெல்லாம் வாழ்க்கைக்கு 90 விழுக்காடு, வேலைக்கு 10 விழுக்காடு நேரத்தை ஒதுக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்காக போராட 90 விழுக்காடு, குடும்பத்திற்காக 10 விழுக்காடு நேரத்தை ஒதுக்கிறார்கள்” என்றார். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த சமயம், மக்களவையில் இடதுசாரி உறுப்பினர்களை பார்த்து பிரதமர், “இவர்களெல்லாம் பிழைப்புக்காக போராடுகிறவர்கள்” என்றார். மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்; கம்யூனிஸ்ட்டுகள் போராடுவதற்காக வாழ்கிறார்கள்.


கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டு வரலாற்றில் ஏராளமான போராட்ட அத்தியாயங்கள் உள்ளன. அதில் ஒன்று திரைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் செய்த ஏராளமான தியாகங்களை, பங்களிப்பை திரைப்படமாக்க வேண்டும்.


 கம்யூனிஸ்ட்டுகளுக்கு எது அங்கீகாரம்? மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி


சுரண்டப்படும் வர்க்கம், ஒடுக்கப்படும் சமூகம் இந்த இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழை பழங்குடி இளைஞன் மீது நிகழ்த்தப்படும் அரச வன்முறையை, அதற்கு எதிரான போராட்டத்தை ஜெய்பீம் சித்தரித்துள்ளது. சட்டப் போராட்டம் பிரதானமாக சித்தரிக்கப்பட்டாலும், களப்போராட்டமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜாகண்ணுவின் இணையர், மார்க்ஸ்ட் கட்சி, உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்காடிய வழக்கறிஞர் சந்துரு ஆகியோரின் பங்களிப்பை பதிவு செய்கிறது. சாதிய ஆதிக்க சக்திகளின் இறுமாப்பு, அதிகார வர்க்கத்தின் சித்தரவதைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாப்பாத்திரத்தை கச்சிதமாக சூர்யா செய்துள்ளார். சூர்யாவிடம் தேவையற்ற ஒரு அசைவு கூட இல்லை. வசனத்தை விட அவரது பார்வை, உடல்மொழி பேசியது. மணிகண்டன், லிஜோமோல் ஜோன்ஸ் தமிழரசன் உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காழ்ப்புணர்ச்சியோடு படம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. “நடந்து செல்லும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையென்றால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள்” என்றார் சேகுவேரா. இலக்கை நோக்கி நடக்கும் பாதையில் கற்களும், முட்களும் இருக்கும். அவற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.


திரைப்படம், அழவைப்பதோடு, அநீதியை எதிர்த்து களமாட தூண்டுகிறது. பழங்குடியின இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான சித்ரவதைகளைக் கண்டு அடிவயிற்றில் கனன்றெழும் நெருப்பை திரைப்படம் விசிறி விடுகிறது. காவல்துறை அடியை, சித்ரவதையை சந்திக்காதவர்கள், அதை அனுபவித்தவர்கள் சொல்வதை கூட கேட்காதவர்கள் லாக்அப் சித்ரவதையை அதீதமாகக் காட்டியிருப்பதாக விமர்சிக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசுகள், சமூக விரோதிகளின் வன்முறையைத் தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுக்கு தெரியும் இது அதீதமல்ல என்று. படம் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிக்கிறார்கள். முதலாளித்துவத்தை, பெண்ணடிமைத்தனத்தை, பிற்போக்குத்தனத்தை, சாதியத்தை திரைப்படங்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றால் ஒடுக்கப்படும் மக்கள் குறித்து ஏன் செய்யக்கூடாது? 


கம்மாபுரத்தில் நடந்தது தனி நபர் சாகசம் அல்ல. கூட்டு முயற்சியின் வெற்றி என்பதை திரைப்படம் பதிவு செய்கிறது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் போராடியது. படத்தை பாராட்டுகிறவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பை பற்றி பேசாமல் செல்வதன் நுண் அரசியல் என்ன? 


இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஓர் அநீதியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து கேள்விக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மலர் கிரீடங்களை எதிர்பார்த்து நாங்கள் தலையிடுவது கிடையாது... பாதிக்கப்பட்டவர்கள் போராளிகளாக மாறும் ரசவாதம்தான் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம். செங்கொடியை படத்தில் பார்க்கும் போது உள்ளம் பூரிக்கிறது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்த செங்கொடி உலகப்பார்வைக்கு சென்றுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ள சூழலில் இந்த காட்சி அமைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூக அநீதியை தட்டிக்கேட்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. சாதிய சுவர்களை வீழ்த்துகிற, உழைக்கும் மக்கள்தான் உலகத்தின் உயிர் நாடி என்பதை அண்மைக்கால தமிழ் திரைப்படங்கள் உரத்து சொல்லி வருகின்றன. சாதி, போதை, மதவெறி, வன்முறை, பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க அவரவர் தளங்களில்  தொடர்ந்து போராடுவோம்.


பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இயக்குநர் த.செ.ஞானவேல்

திரைப்படத்தின் கரு உருவாக காரணமாக இருந்த இயக்கம் நடத்தும் பாராட்டு விழா மகிழ்ச்சியளிக்கிறது. கலை மக்களுக்காகத்தான் என்பதை இடதுசாரி இயக்கத்தின் படைப்பாளிகள், சிந்தனையாளர்களின் படைப்புகள் உணர வைத்தன. ஒரு கட்சியின் பிரதிநிதியாக இருந்து, ஒரு தத்துவத்தை முன்னிறுத்த, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்றெல்லாம் கதை எழுதவில்லை. அது என்னுடைய நோக்கமும் அல்ல. ஆனால், இடதுசாரி இயக்கத்திற்கு அதைவிட சிறப்பு என்னவென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை எழுதும்போது அங்கே இடதுசாரி இயக்கம்; சிந்தனையாளர்கள்; படைப்பாளிகள் வந்து நிற்கிறார்கள்.


கட்சி அரசியல் என்பது ஓட்டோடு நேரடி தொடர்புடையது. யார் வாக்களிக்கிறார்களோ அவர்களுக்காக பேசுவது எல்லா கட்சிகளும் செய்யக் கூடியது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுரிமை இல்லாத மக்களின் பிரச்சனைகளை தோளில் ஏந்தி போராடுகிற இயக்கத்தை, அதன் பங்களிப்பை பதிவு செய்ய கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக படத்தை பதிவு செய்துள்ளோம். ஒரு ராஜாகண்ணு, ஒரு பார்வதி என்று சுருக்கி கதையை எழுதவில்லை. 60 இருளர் கிராமத்தை ஆய்வு செய்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் ராஜகண்ணுக்கள் இருக்கிறார்கள். எட்டாத பல கிராமங்கள் உள்ளன. போக வேண்டிய தூரம் நீளமாக இருக்கிறது. நாம் சென்றடைய வேண்டிய மக்கள் அதிகமாக உள்ளனர். போராட்டங்கள் ஒருவரை நோக்கி சுருங்குவதில்லை; ஒருவரிடமிருந்து தொடங்கலாம். அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமாக ஜெய்பீம் உணர்ந்தேன். எனவே, அந்த பெயரை வைத்தேன்.


காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்கள் திரைப்படத்தில் இருக்கும். சிவப்பு, நீலம், கருப்பு இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தியாவை மீட்க முடியும். நல்ல நிலைக்கு மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறுபுள்ளியாக இந்த படம் உள்ளது. படத்தில் உண்மையை முழுமையாக பேசவில்லை. நாம் பேசிய உண்மைகள் அவர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. உண்மையை புதைக்கலாம், விதையை போன்று முளைத்து அது வெளியே வரும். அப்படியான முயற்சிதான் இந்தப்படம். கம்யூனிச இயக்கம் செய்த பங்களிப்பை எந்த இடத்திலும் குறைவாக பதிவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.


நீதிமன்றத்தில் வழக்கு ஒரு இடத்தில் சிறிது தடுமாறும். அப்போது, “கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால், ரோட்டில் இறங்கி போராடுவோம்” என்ற வசனம் கம்யூனிஸ்ட், செயற்பாட்டாளர்களுடையதுதான். சட்டப்போராட்டமும் களப்போராட்டமும் இணைப்பிரியாத சங்கிலி. ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். இந்தப் போராட்டம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போன்றததுதான். கடலூரில் 1993-1996 காலக்கட்டத்தில் மட்டும் இதுபோன்ற 12 வழக்குகளில் இடதுசாரிகளின் பங்களிப்பு உள்ளது. இவை அனைத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வர முடியாது. எந்தளவுக்கு நேர்மையாக பதிவு செய்ய முடியுமோ அந்தளவிற்கு பதிவு செய்துள்ளோம். இந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்ததோடு, சூர்யாவே நடித்ததும் படம் வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்தது. கூட்டுமுயற்சியானது களத்திலிருந்து கதையை நோக்கி படம் நகர்ந்துள்ளது.

தனித்து நின்று போராடுவதல்ல... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா


‘ஜெய்பீம்’ வெளிவந்ததிலிருந்து ஏற்படுத்திய அதிர்வலை இன்றும் ஓய்வில்லை. ஒருவர் சொந்த சாதிக்கு துரோகம் செய்யும்போதுதான் சாதி ஒழிப்பு போராட்டம் வலுப்பெறும். சாதி ஒழிப்பு என்பது ஒடுக்கப்பட்ட சாதியினர் தனித்து நின்று போராடுவதல்ல, ஒடுக்கும் சாதியை சேர்ந்தவர்களும் இணைந்து போராடும்போதுதான் அது சாத்தியமாகும். பொதுச்சமூகத்தின் மனசாட்சி யாருக்காக துடிக்க வேண்டும் என்ற கேள்வியை ‘ஜெய்பீம்’ எழுப்பியுள்ளது. நாகரீக சமூகமாக மேலெழுந்து செல்ல காவல்துறைதான் தடையாக உள்ளது என்று காவல்துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையங்கள் கூறுகின்றன. சித்ரவதைக்கு எதிரான 2 உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதற்கான விதிகளை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் இயக்கம்தான் சமூக களத்தை தீர்மானிக்க வேண்டும். அதற்கு கலையும் இலக்கியமும் உறுதுணையாக வரும் என்றார்.


சிவப்பதிகாரம் நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், காவல்துறையின் அதகாரச் சிவப்பை விட, கம்யூனிஸ்ட்டுகளின் வர்க்கச் சிவப்பு வலிமையானது என்று களப் போராளிகளும், கலைப் போராளிகளும் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர். ஜெய்பீமும், லால்சலாமும் ஒன்றாக உட்கார்ந்துள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட வாழ்வை, வாதையை சொல்லிய ஜெய்பீம், மாநில முதலமைச்சரை குடிசையை நோக்கி நடக்க வைத்துள்ளது. கண்ணகிக்கு நீதி கேட்க கால் சிலம்பு இருந்தது; பார்வதிக்கு செங்கொடிதான் இருந்தது. அது சிலப்பதிகாரம் என்றால், இது சிவப்பதிகாரம் என்றார்.


விருதுகளை தடுக்கும் பாஜக இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், “சர்தார் உத்தம்சிங், ஜெய்பீம் என அடுத்தடுத்து படங்கள் வந்து சமூகத்தை அதிரச் செய்துள்ளன. உத்தம்சிங் படம் சர்வதேச விருகளை பெற விடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுத்து வருகிறது. இதனையும் மீறி ‘ஜெய்பீம்’ சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. பழங்குடிகளின் வாழ்வை ‘ஜெய்பீம்’ வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.


ஓராயிரம் கோவிந்தன்கள்

“கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு போராட்டத்தை படமாக்கியதற்கே பல தளங்கள் அதிர்கின்றன. ஒவ்வொரு போராட்டத்தையும் படமாக்கினால் சமூகமே கொந்தளிக்கும். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணம் கோவிந்தன். அவரை போன்று ஓராயிரம் கோவிந்தன்கள் கட்சியில் உள்ளனர் என்பதை பெருமையோடு கூறுகிறோம்” என்று கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தமது வரவேற்புரையில் கூறினார்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு வணக்கம்


‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கலை இயக்குநர் கே.கதிர் குறிப்பிடுகையில், “வாக்குகளை மட்டுமே நம்பி கட்சி நடத்தும்போது, வாக்குரிமையே இல்லாத அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, சாதிய, சமூக, அரசு அதிகாரத்திற்கு எதிராக இறுதிவரை போராடி வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு வணக்கம். எனது 65வது படத்தில்தான் கம்யூனிஸ்ட்டுகளிடம் பாராட்டை பெறுகிறேன். வெகுஜன மக்கள் விழிப்படைந்து கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக படத்தை எதிர்க்கிறார்கள். நாட்டில் மதம் என்ற பெயரில் துவேசத்தை  உருவாக்குகிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து நல்ல இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.