ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனநந்தபூர் மாவட்டம், திண்ணஹிட்டிகி கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பேசாமி. இவருக்கு திருமணமாகி 6 மாத கைக் குழந்தை ஒன்று இருந்தது. தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து சந்தேகமடைந்த திப்பேசாமி, தனது மகன் தனக்கு பிறக்கவில்லை என்று கருதியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டு திப்பேசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். மனைவி மட்டும் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்த வேளையில், திப்பேசாமி தனது 6 மாத மகனை ஒரு புதருக்குள் தூக்கிச் சென்று கொலை செய்துள்ளார். மேலும், அங்கு குழியை தோண்டி மகனை புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், அருகில் கணவன் மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கணவன், மகன் காணவில்லை என மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், திப்பேசாமி தனது மகனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இருப்பினும், தப்பியோடிய திப்பேசாமியை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்கு போலீசார் காத்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், சமீபத்தில் திண்ணஹட்டிகி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு திப்பேசாமி பெயரில் திருமணப் பத்திரிக்கை ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த போலீசார், நாகராஜிடம் விசாரணை நடத்தி கர்நாடகாவில் வசித்து வந்த திப்பேசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய திப்பேசாமி கர்நாடகா மாநிலத்துக்குச் சென்று தனது பெயரை கிருஷ்ணா கவுட் என்று மாற்றி அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திப்பேசாமிக்கும், அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த திருமணத்திற்கு தனது நண்பரான நாகராஜை வரவழைக்க திருமணப் பத்திரிக்கை அனுப்பியுள்ள நிலையில் தான் திப்பேசாமி பிடிபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. சொந்த மகனை கொலை செய்து தப்பியோடிய தந்தையை 26 வருடங்களுக்கு பிறகு திருமணப் பத்திரிக்கையால் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.