தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இதனையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470 கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ஒன்று வீடு ஒன்று இருந்தது. அக்கட்டடத்தின் பழமை மற்றும் உறுதித்தன்மை குறைவு ஆகியவற்றைக் காரணம் காட்டி கடந்த சில ஆண்டுகளாக இந்த வீட்டை இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
அதே சமயம் இந்த வீட்டில் இந்த வீட்டில் வாசித்து வரும் உரிமையாளர்களான 3 குடும்பத்தினரிடையே சொத்து பிரிவினை பிரச்சனையும் இருந்துள்ளது. இதன் காரணமாக வீட்டை இடித்து அப்புறப்படுத்த முடியாத நிலையில் அரசு அதிகாரிகள் இருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் முன் பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது. அச்சமயத்தில் விட்டில் வசித்தவர்கள் பின் பகுதியில் உள்ள வாயில் வழியாக வெளியேறி, நல்வாய்ப்பாகக் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். வீடு இடிந்து விழுவது தொடர்பான காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.