தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது.
இதனையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470 கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
அதே சமயம் புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாகச் சீற்றத்துடன் காணப்பட்ட கடற்கரையை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். அதோடு கடல் சீற்றம் காரணமாகக் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலுக்கு, ‘ஃபெங்கல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.