வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அடுத்த மூலக்கொல்லி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தை ஒட்டி வைரகல் மலை என்ற மலை உள்ளது. இந்த மலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிமாநிலங்களில் இருந்து சில மர்ம நபர்கள் புதையில் இருப்பதாக பூஜைகள் செய்தபோது கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களாக மீண்டும் அந்த வைரக்கல் மலையில் இரவு நேரங்களில் வெளி மாநிலத்திலிருந்து கார்கள் மூலம் சில மர்ம நபர்கள் வருவதாகவும், அவர்கள் அந்த மலைக்கு உச்சிக்குச் சென்று பூஜைகள் செய்வதாகவும், பூஜைகள் செய்யும்போது பலத்த வெடிச் சத்தமும் கேட்பதாகவும் அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த வைரக்கல் மலையில் புதையல் இருப்பதாக மீண்டும் சில மர்ம நபர்கள் மலையைச் சுற்றி நோட்டமிட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மலைக்கு மேல் சென்று பூஜைகள் செய்வதால் நரபலி நடக்கலாம் எனக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் தங்கள் கிராமத்திற்கு வரும் வெளி மாநில நபர்களை பிடித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.