தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இதனையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470 கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்குக் கூட முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இனியாவது விழித்துக் கொண்டு காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இதை வேண்டுகோளாக ஊடகத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பொதுமக்கள் வானிலை மையத்தில் என்னென்ன கருத்துக்கள் சொல்கிறார்கள் அதையெல்லாம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.