வேலூர் மாவட்டம், வாலாஜபேட்டை நகரத்தின் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அனந்தலையை சேர்ந்த பாலாஜி என்பவர், ஊரில் புதியதாக கட்டிய வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு வழங்கவும், மீட்டரை இடமாற்றம் செய்ய வேண்டி மனு தந்துவிட்டு வந்துள்ளார். உங்களை போன் செய்து அழைக்கிறோம் என சொல்லி அனுப்பியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து போன் செய்த மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றும் சரவணன் அலுவலகம் வந்து செல்லுங்கள் எனச்சொல்லியுள்ளார். அதன்படி பாலாஜியும் சென்றுள்ளார்.
![Bribed Power Board Officer arrested in vellore](http://image.nakkheeran.in/cdn/farfuture/G9VmcziQxefRxPyxVrJ-pmD-cG4OgOxkGg6Tahj7aAE/1558158220/sites/default/files/inline-images/z10_12.jpg)
அப்போது சரவணன், பாலாஜியிடம் மின் மீட்டரை இடமாற்றம் செய்ய ரூ.10,500 லஞ்சமாக வேண்டும் எனக்கேட்டுள்ளார். இறுதியாக ரூ.9600 தந்துவிடுங்கள் எனச்சொல்லியுள்ளார். லஞ்சத்தை குறைப்பதற்கு பேசாத பேச்சுக்களை பேசியுள்ளார் சரவணன். இதில் அதிருப்தியான பாலாஜி, வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் போட்டு தந்த திட்டப்படி, ரூபாய் 9600 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். தற்காலிக மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்தியதுபோக மீதியுள்ள பணம் ரூபாய் 2380 லஞ்சப் பணம் முதல் கட்ட தவணை, மீதி தர வேண்டும் எனச் சொல்லும்போதே மறைந்துயிருந்த போலிஸார் அவரை கைது செய்தனர்.
ஒருக்காலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள், இப்படித்தான் புதிய இணைப்பு வாங்க, ரிப்பேர் என்றால் சரிச்செய்ய வாடிக்கையாளர்கள் புகார் சொன்னால் ஆயிரம் ஆயிரமாக லஞ்சமாக வாங்கியவர்கள், வாடிக்கையாளர்களை ஏளனமாக பேசினார்கள். இன்று அதேபோல் மின்வாரியத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலோனோர் லஞ்சத்துக்காக பொதுமக்களை நசுக்குகின்றனர். லஞ்சம் கேட்பதோடு, அதை குறைக்கச்சொல்லி பொதுமக்கள் கேட்கும்போது, அவர்கள் நடந்துக்கொள்ளும் விதமும், பேசும் பேச்சும் இப்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்க வைக்கிறது.
இப்படி அடிக்கடி மின்வாரியத்தில் பணியாற்றுபவர்கள் சிக்கினாலும் லஞ்சம் வாங்கும் மற்ற அதிகாரிகள் பார்த்து திருந்துவதில்லை, தங்கள் போக்கை மாற்றிக்கொள்வதுமில்லை என்பதே தமிழகம் முழுவதும் எதார்த்தமாகவுள்ளது.