கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரத்தில்- நாகப்பட்டினம் மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலைக்கு விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களுக்கு மிகக்குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்தும், தற்போது மதிப்பின்படி நிலத்திற்கு பணம் ஒதுக்க கோரிம் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மாமல்லன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதி மணிவண்ணன். உள்ளிட்ட விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கடவாசேரி, பிள்ளை முத்து பிள்ளை சாவடி, உசுப்பூர், வல்லம்படுகை ஆகிய பகுதிகளில் வாழும் சம்மந்தப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு குறைந்த அளவில் பணம் வழங்கப்படுவதை கண்டித்தும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலங்களுக்கு ஒரு சென்ட்க்கு 6,800 வீதம் மட்டுமே ஒதுக்கி உள்ளனர்.
தற்போது அந்த இடம் செண்டு ஒரு லட்ச ரூபாய் விதம் விற்பனையாகிறது. கூடுதல் இழப்பீடு தொகை வழங்கிடகோரியும், தென்னைமரம் உள்ளிட்டவைகளுக்கு தனி இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு மாற்று இடம் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து சிதம்பரம் சார் ஆட்சியரின் உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.