சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து, கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டிற்கும் கரோனா தொற்றால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கரோனா வைரஸ் தமிழகத்தில் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளால் ஒட்டுமொத்த தமிழகமும் கரோனாவால் முடக்கப்பட்டது.
இந்தநிலையில், கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிலும் வைரஸ் தொற்று பரவியிருப்பது ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலையவே வைத்திருக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மார்க்கெட்டிற்கு உ.பி.யில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கும், அவரோடு கூட வந்தவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது.
அதோடு அந்த டிரைவர் சென்று பொருட்கள் வாங்கிய கடை உரிமையாளர்கள், கடையில் வேலை செய்பவர்கள், உணவு சாப்பிட்ட ஹோட்டல்களில் வேலை செய்தவர்கள், மார்க்கெட்டில் மூட்டைகளை ஏற்றி இறக்கும் லோடு மேன்கள், இவருடன் கடந்த இரண்டு நாட்களாக பழகியவர்கள் என 80 நபர்கள் கண்டறியப்பட்டு, தஞ்சை அருகில் உள்ள வல்லத்தில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தாராசுரம் காய்கறி மார்க்கெட்டை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தாராசுரம் காய்கறி மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட்டை போல மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.