இந்தியா முழுவதும் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே படுக்கை வசதி , மருத்துவ வசதி, ஆக்சிஜன் உள்ளிட்டவை தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது. அதே போல் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் பலரும் தீவிர சுவாச கோளாறு ஏற்பட்டு மரணித்து வருகின்றனர். அதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடை சரி செய்வதற்காக பல இடங்களிலும் அதனை தயாரிக்க வழிவகை செய்து வருகின்றனர்.
அதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு, 5800 கியூபிக் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் உடன் டேங்கர் லாரி மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் வேகமாக பரவி வருகிற நிலையில் தொற்று பாதிக்கப்பட்ட பலருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் கரோனா நோயாளிகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ கழக அறிவுறுத்தல்படி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு டேங்கர் லாரியில் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. மேலும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் இன்று வரை 1 லட்சம் க்யூபிக் லிட்டருக்கும் மேலாக திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.