திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் இன்று (17/12/2021) காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி.விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். மற்றவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று (17/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சாஃப்டர் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நாளை (18/12/2021) முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.