அரசியலுக்கு வந்துவிட்டால், ஓட்டு அவசியமாகிவிடுகிறது. கொள்கை பேசி, வாக்குகளை இழந்துவிட மனம் வராது. இதற்கு பகுத்தறிவாளர் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல.
ஒரு தடவை, “நாத்திகன் என்று என்னை அழைப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஆத்திகர்கள் வசதியாக என்னை அழைப்பதற்காகக் குறிப்பிட்டது. நான் பகுத்தறியவே விரும்புகிறேன்” என்றார் கமல். மேலும் அவர், “நான் கடவுள் மறுப்பாளன்; நாத்திகன் அல்ல. நல்ல பகுத்தறிவாளன்” என்றும் உறுதிபட கூறியிருக்கிறார். “நான் கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னையே கடவுளுங்கிறீங்களா?” என்று தன்னை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று கோஷமிட்டு அழைத்த ரசிகர்களை அவர் கண்டித்ததும் உண்டு.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது மற்றும் கொடி ஏற்றியது அமாவாசை நாளில் என்பதால், போலி பகுத்தறிவாளர் என விமர்சனத்துக்கு ஆளானபோது “நான் பகுத்தறிவுவாதிதான். ஆனால், என்னிடம் இருக்கும் அனைவருமே பகுத்தறிவாளர்கள் இல்லை. என் அமைப்பில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். என் வீட்டில், என் மகள்கூட பகுத்தறிவுவாதி இல்லை. நான் கட்சி தொடங்கியிருப்பது, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி, மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக அல்ல. ஏழ்மையையும், ஊழலையும் ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.” என்று விளக்கம் தந்தார்.
அரசியலுக்காகத் தனிப்பட்ட கொள்கையைக்கூட முன்புபோல் அழுத்தமாக வெளிப்படுத்த முடியாத கமல்ஹாசன், ஏதாவதொரு விதத்தில், சாமிகள், தெய்வங்கள் குறித்த விஷயங்களை, தேர்தல் களத்தில் அவ்வப்போது பேசிவிடுகிறார். விருதுநகர் அம்மன்கோவில் திடலில் அவர் இப்படி பேசியிருக்கிறார் -
“உங்கள் பக்தி.. உங்கள் தெய்வங்கள்.. அப்படியே இருக்கும்.. இவங்க பக்தி, தெய்வம் போட்டுட்டு வர்றதெல்லாம் வேஷம். இவங்க பக்தி.. இவங்கள்லாம் வர்றதுக்கு முன்னாலயே உங்களுக்கு சாமிகளெல்லாம் இருக்கு. இவங்க புதுசாமி கொண்டுவந்து வைப்பாங்க. அதை மறந்துடாதீங்க. உங்களுக்குத் தெரியலியா? அவங்க எந்த சாமி இருக்கணும்னு நம்புறாங்கன்னு. ஒரு படமே எடுத்துப் போட்டாங்களே.. எந்த சாமிக்கு அர்ச்சனை பண்ணனும்னு. அதனால அந்த சாமியையெல்லாம் நம்பிடாதீங்க. நீங்க நம்புற சாமியை நம்பிட்டிருங்க. நான் மக்களை நம்புகிறேன். அவர்கள்தான் எனக்கு நம்பிக்கையூட்டும் போரொளி.” என்று போகிறபோக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ’பஞ்ச்’ விட்டார்.
“அரசியலில் துணிச்சலாக இறங்கிவிட்ட பிறகு, எதற்காக எல்லா சாமிகளையும் இழுத்து, பம்மிக்கொண்டு பேசுகிறார் கமல்? நேரடியாக மக்களிடம், தமிழகத்தில் தியேட்டர்களில் காட்டப்படும் அரசு விளம்பரத்தில், “சாமி பெயருக்கு..” என்று சொல்லிவிட்டு, “நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்கு” என்று ஒரு பெண் சொன்னதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா? எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக மக்களுக்குச் சாமியானார்? என்று அனைவருக்கும் புரியும்படி விபரமாகப் பேசியிருக்கலாமே?” என்று அந்த இடத்திலேயே ‘கமெண்ட்’ அடித்தது ஒரு பொதுஜனம்!
அனைவருக்கும் புரியும்விதத்தில் பேசினால் அவர் கமல்ஹாசனே அல்ல!