கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ஷரீப் அகமதின் மகன் ரியாஸ் அஹமது வயது 30. இவர், கடந்த 30ஆம் தேதி சேலம் மெயின் ரோடு அருகில் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டினார்கள். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டுகிடந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யாத்பாஷா என்பவர் மனைவி அய்யாத்பீ என்பவரை தேடி சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சென்னை வியாசர்பாடி கிருஷ்ணசாமி தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணசாமி என்பவரது மனைவி பஷீரா என்கிற சுசீலா வயது 46. இவர், அய்யாத்பீவியின் தோழி. பஷீரா இந்து மதத்திற்கு மாறி இந்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர் பெயரை சுசீலா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். சில மாதங்களுக்குப் பின் மீண்டும் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி சேர்ந்த (தற்போது மருத்துவமனையில் உள்ள) ரியாஸ் அஹமது மூலம் அவரை தொடர்புகொண்டு பஷீரா வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அந்த வகையில் பஷீராவுக்கும் ரியாஸ் அகமதுவுக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இந்த நெருக்கமான தொடர்பின் காரணமாக ரியாஸ் அகமது, பஷீராவிடம் இருந்து மூன்றரை லட்சம் பணம் கடன் பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரியாஸ் அகமது வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். பஷீராவின் அண்ணன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த திருமண செலவிற்காக பஷீர் அகமதுவிடம், தான் கொடுத்த மூன்றரை லட்சம் பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 31 10 2020 அன்று பஷீரா, கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக வந்து ரியாஸ் அஹமதுவை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார். அப்போது நியாஸ் அகமது பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பஷீராவை ரியாஸ் அஹமது தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பசீராவை ரியாஸ் அகமது கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பஷீரா தன்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றுவதோடு தன்னைத் தாக்கும் அளவிற்கு சென்ற ரியாஸ் அகமதுவை கொலை செய்ய திட்டமிட்ட பஷீரா, என் உதவியை நாடினார். அதன்படி ரியாஸ் அகமதுவை கூலிப்படையை வைத்து கொலை செய்ய அவருக்கு உதவி செய்தேன். கூலிப்படைக்கு தனது நகைகளை விற்று ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார் பஷீரா. இதற்கு உதவியாக பஷீராவின் கணவர் ஹரி கிருஷ்ணசாமியின் தங்கையின் கணவர் மூலம் கூலிப்படையினரை கள்ளக்குறிச்சி அழைத்து வந்து ரியாஸ் அகமதுவை அடையாளம் காட்டியுள்ளார். அதன்படி நான்கு பேர் கொண்ட கும்பல் ரியாஸ் அகமதுவை வழிமறித்து பட்டா கத்தியால் வெட்டிவிட்டு சென்னைக்கு தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் போலீசார் எனக்கும் பஷீராவுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து என்னை கைது செய்துள்ளனர் என்று அய்யாத்பீ போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் கூலிப்படையினர் மற்றும் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்த பஷீரா, ரியாஸ் அகமதுவை கூலிப்படைக்கு அடையாளம் காட்டிய ஹரி கிருஷ்ணசாமியின் தங்கை கணவர் உட்பட அனைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கூலிப்படையினர் மூலம் கள்ளக்குறிச்சியில் வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.