விழுப்புரம் மாவட்டம், குமளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(48). விவசாயியான இவர், கடந்த 2014ஆம் ஆண்டு தங்கள் குடும்ப சொத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதை விசாரணை செய்த குமளம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன்(35), அய்யனார் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்துள்ளார்.
இதையடுத்து அய்யனார், சீனிவாசனை அணுகி தான் அனுப்பிய மனு அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன், பட்டா மாற்றம் செய்வதற்கு 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அய்யனார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பொடி தடவிய பணத்தை அய்யப்பனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அந்தப் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை சந்திக்க அய்யனார் சென்றார். அப்போது அங்கு சீனிவாசன் உடன் வாக்கூர் கிராம நிர்வாக உதவியாளர் ரமேஷ் அங்கு இருந்துள்ளார். சீனிவாசன் அந்தப் பணத்தை ரமேஷிடம் தருமாறு கூறியுள்ளார். அதேபோன்று அய்யனார், ரமேஷிடம் அந்த பணத்தை கொடுக்க ரமேஷ் அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் இடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நிலையில் நேற்று நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.
அந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் கிராம உதவியாளர் ரமேஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.