Skip to main content

பழனியை பரபரப்பாக்கிய கேரள பெண் வன்கொடுமை புகார்..! மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை என்ன?

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

Kerala woman incident in palani  What is the action of the District SP

 

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்துவிட்டு விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தலச்சேரி போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் அப்பெண் கூறியதாவது; கடந்த 19 ஆம் தேதி பழனிக்கு நானும் எனது கணவரும் வந்தோம். பழனியில் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது எனது கணவர் அருகில் இருந்த கடைக்குச் சென்றுவிட்ட நிலையில், மூன்று நபர்கள் என்னைக் கடத்திச் சென்று அருகிலிருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்துவிட்டனர். பின்னர் என்னைத் தேடிவந்த என் கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக வன்புணர்வு செய்தனர். காலையில் தங்கும் அறையிலிருந்து தப்பி வெளியே வந்து எனது கணவரைச் சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறினேன். கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது போலீஸார் புகாரை வாங்க மறுத்தனர். அதனால், வேறுவழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பி வந்து விட்டேன். அவர்களின் சித்திரவதையால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

 

இந்த வன்புணர்வு சம்பவம் குறித்து தலச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகக் கேரள டி.ஜி.பி. அனில்காந்த் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் புகார் கொடுக்கவந்தவர்களை விசாரிக்காமல் விரட்டிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில், பழனியில் கேரளா பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தின் உண்மை நிலையை விளக்க வேண்டும் எனவும் குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா, இதுதொடர்பாக பழனியில் நேரடியாக விசாரணை செய்து வருகிறார். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் அடிவாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸார் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக பழனி போலீஸாரை கேரளாவிற்கு அனுப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

 

இது சம்பந்தமாக மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா, பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “கேரள பெண், பழனிக்கு வருகை தந்தபோது வன்புணர்வு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 365 மற்றும் 376D ஆகிய கடத்தல் மற்றும் கூட்டு வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகப் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

சி.சி.டி.வி. காட்சிகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல் துறை துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. அதனால், கேரள பெண் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாகத் தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். இந்த வழக்கில் அறிவியல்பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீஸாருடன் இணைந்து முழு விசாரணை செய்வோம்” என்று கூறினார்.

 

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் பாதிக்கப்ட்ட பெண்ணின் கணவர் தர்மராஜ் என்பவர் மதுபோதையில் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கூறியதாகவும், நல்ல நிலையில் இருக்கும்போது வந்து புகார் கொடுக்க காவல்துறையினர் கூறியதாகவும், சம்பந்தப்பட்ட விடுதி பகுதியில் சென்று பார்த்தபோது அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை எனத் தெரியவந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், புகார் தெரிவித்த ஆணும் பெண்ணும் பல இடங்களில் சுற்றித் திரிந்ததாக சாட்சிகள் விசாரணையில் தெரிய வந்ததாகவும், சில இடங்களில் சிசிடிவி பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கேரள பெண் வன்கொடுமை குறித்து பழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்