Skip to main content

புதுப்பெண் தற்கொலை; ரவுடி மீது பாய்ந்த போக்சோ!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Girl passes away salem police register case on pocso

 

சேலத்தில், சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாக முக்கிய ரவுடியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

சேலம், பெரமனூர் நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் சின்னவர் (28). முக்கிய ரவுடி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரை கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான சின்னவர், சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

 

பின்னர், பிணையில் விடுதலை ஆன அவர், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சீதா (19 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெரமனூரில் தனியாக வீடு எடுத்து வசிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் ரவுடி சின்னவர், கிச்சிப்பாளையத்தில் உள்ள பெற்றோரைக் காணச் சென்றிருந்தார். அப்போது செல்லத்துரை கொலைக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் அவருடைய ஆதரவு ரவுடிகள் சின்னவரைச் சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கினர். 

 

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையால் உடல்நலம் தேறிய அவர், கடந்த ஏப். 26ம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீடு குப்பையும், கூளமுமாகக் கிடந்துள்ளது. இதைப் பார்த்து கோபம் அடைந்த சின்னவர், வீட்டைச் சுத்தப்படுத்தாதது ஏன் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். 

 

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியைத் திட்டிவிட்டு சின்னவர் வீட்டில் இருந்து வெளியே எங்கேயோ சென்று விட்டார். இரவு 10.30 மணிக்கு மேல் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்துப் பள்ளப்பட்டி காவல்நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

இதற்கிடையே, திருமணம் முடிந்து 9 மாதத்திற்குள் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கைச் சேலம் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். சீதாவின் பள்ளிச் சான்றிதழை ஆய்வு செய்தபோது, அவருக்கு 17 வயது இருக்கும்போதே சின்னவர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டாட்சியர், பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தார். 

 

அதன்பேரில் காவல்துறையினர், சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாகச் சின்னவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரைச் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். அதேநேரம், சீதா தற்கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்