சேலம், சூரமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக மாநகரக் காவல்துறை ஆணையருக்குத் தகவல் கிடைத்தது. ஆணையர் உத்தரவின்பேரில், சூரமங்கலம் சரகக் காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் விசாரணை நடத்தினர்.
அதில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர். பெண்களை இத்தொழிலுக்கு கமிஷன் அடிப்படையில் அழைத்துவந்ததாக அங்கிருந்த தரகர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வாசுதேவன் (46), அவருடைய மனைவி ஜெயலட்சுமி (36), குண்டுபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பரிமளா (39), பொன்னம்மாபேட்டை தில்லை நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வி, நாமமலையைச் சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களையும் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரத் தொழிலுக்கு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளர் சரோஜினி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைதான பெண்களை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், ஆண்களை ஆத்தூர் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.