உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்திய விஞ்ஞானிகளின் வெற்றிச் செயல். இதுவரை யாரும் தொட்டுப் பார்க்காத நிலாவின் தென்துருவத்தில் தரையிறங்கி முத்திரை பதிக்க வேண்டும் என்ற இந்திய விஞ்ஞானிகளின் எண்ணம் சந்திரயான் மூலம் அரங்கேறியுள்ளது. ஒருமுறை வெற்றியைத் தவறவிட்டாலும் அடுத்த முறை சரியான இலக்கை நோக்கிய பயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அந்த வெற்றிகரமான நிகழ்வை இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களின் வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றிக்கு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்த தமிழ் விஞ்ஞானிகளும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த வெற்றிக் கொண்டாட்டம் ஒரு நாளில் முடிந்துவிடவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக் கிழமை மாலை அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்த பள்ளி தலைமை ஆசிரியர் யோகராஜா மற்றும் ஆசிரியர்கள், எஸ்எம்சி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ‘சாதித்த சந்திரயான் 3 விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வுக்காகத் தான் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்’ என்று கூறினர்.
இந்த வெற்றியை சாத்தியமாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அமைய வேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்ல, சில மாணவர்கள் தேசியக் கொடிகளை ஏந்தி வந்து அசைத்தனர். அப்போது அங்கு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து நன்றியைத் தெரிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் யோகராஜா, சந்திரயான் விஞ்ஞானி வீரமுத்துவேல் சராசரியாக படிக்கும் அரசுப் பள்ளி மாணவர் தான். அவரது இலக்கை நோக்கி பயணித்ததால் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு மாணவரும் இதுபோல இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்றார். சந்திரயான் 3 விஞ்ஞானிகளுக்கு தேசியக் கொடி அசைத்து கரகோஷம் எழுப்பி நன்றி சொன்னது மன நிறைவாக உள்ளதாகப் பெற்றோர்கள் உற்சாகமாக கலைந்து சென்றனர்.