Skip to main content

"நீட் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாகக் கருதாமல்..." - அன்புமணி அறிக்கை

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

kl;

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை  அறிவித்திருக்கிறது.

 

அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்த பிறகும் நீட் பயிற்சி தொடங்கப்படாததை நேற்று முன்தினம் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதே நாளில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், இது குறித்து விவாதித்து பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்திருக்கிறார். நீட் பயிற்சி வகுப்புகள் மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்டாலும், ஓரளவு மேம்படுத்தப்பட்ட  வடிவில் நடத்தப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

 

தமிழ்நாடு முழுவதும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அனைத்துப் பயிற்சி மையங்களிலும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படும். கடந்த காலங்களில் மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு  ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது.

 

முதல் வகை பயிற்சி வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டாலும் முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெற்றது. அதில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அதை மாணவர்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. இரண்டாவது வகையான பயிற்சி வழங்கப்பட்ட ஹைடெக் ஆய்வகங்கள் எனப்படுபவை சாதாரணமான கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள்தான். அவற்றில் மாணவர்கள் தாங்களாகவே தான் இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். இதில்  மாணவர்களுக்கு வழிகாட்ட வல்லுநர்கள் இல்லாததால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

 

ஆனால், இப்போது 412 மையங்களில் நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதால் மாணவர்கள் தங்களின் ஐயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதிரித் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை மதிப்பிட முடியும். இது புதிய முறையின் சிறப்புகளாகும்.

 

எனினும், நவம்பர் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கும் நீட் பயிற்சி வகுப்புகளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை, ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய நாள், பொங்கல் திருநாள், தேர்வுக்கு முந்தைய சனிக்கிழமை தவிர, அதிகபட்சமாக 14 நாட்கள் மட்டும்தான் நடத்த முடியும். தனியார்ப் பள்ளிகளில் பயிலும் நகர்ப்புற பணக்கார மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை பயிற்சி பெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெறும் 14 நாட்கள் மட்டும் பயிற்சி அளிப்பது போதுமானதாக இருக்காது.  இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளை கல்வித்துறை செய்ய வேண்டும்.

 

தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அதற்கான கையேடுகளும், வினா - விடை தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள பெரும் உதவியாக உள்ளன. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கையேடு மற்றும் வினா - விடை தொகுப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல் வார சனிக்கிழமையில் நடத்தப்படும் பாடம் குறித்து அடுத்த வாரத்தில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாகக் கருதாமல், தொழில் முறையானதாக மாற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்களில் குறைந்தது 100 பேராவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இல்லாமல் பொதுப்போட்டி  பிரிவில் மருத்துவப் படிப்பில் சேரும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்