Skip to main content

அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தில் மோதல்; வரவு செலவு காரணமா...?

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Conflict in the family of Minister Durakkannu!

 

அமைச்சர் துரைக்கண்ணு இறந்த நொடி முதல், பணபரிவர்த்தனை விவகாரத்தால் அவரது குடும்பத்திலும், ஆதரவாளர்கள் வட்டாரங்களிலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை அனலாக மூண்டுகொண்டிருக்கிறது.

 

வேளாண்மைத்துறை அமைச்சரான துரைக்கண்ணு கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி நவம்பர் 1ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், சட்டமன்ற தேர்தலுக்காக துரைக்கண்ணுவிடம் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட பணம், கமிஷன் விவகாரத்தில் அவரிடமிருந்து வரவேண்டிய பணம் என பல கோடி கொடுக்கல் வாங்கள் விவகாரத்தால் இறப்பின் அறிவிப்பை தள்ளிவைத்ததாக அதிமுக பெரும்புள்ளிகளே பேசினர். இதற்கிடையில் துரைக்கண்ணு இறந்துவிட்டதாக கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விஐபிகள் தங்களது முகநூலிலும், ஸ்டேட்டஸ் பக்கங்களிலும் பதிவிட்டு அவசர அவசரமாக நீக்கினர். 

 

இந்தநிலையில் அமைச்சர் துரைக்கண்ணு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்களின் குடும்ப வழக்கப்படி பால்தெளிப்பு நிகழ்வு நடந்தது. அங்கு துரைக்கண்ணுவின் உறவினர்களும், நெருக்கமான கட்சிக்காரர்களும் வந்திருந்தனர், அந்த இடத்தில் அமைச்சரின் மூத்த மருமகன் கனகாதரனுக்கும், அமைச்சரின் இளையமகன் ஐயப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் நிலையில் இருவரையும் அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். 

 

இதுகுறித்து துரைக்கண்ணுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம், “துரைக்கண்ணுவின் மூத்த மகள் சத்தியாவின் கணவர் கனகாதரன், அவருதான் துரைக்கண்ணு எம்.எல்.ஏ.வாக இருந்ததில் இருந்து அமைச்சராக இருந்து, இறந்ததுவரை அனைத்து வரவு செலவுகளையும் கவனித்துவந்திருக்கிறார். கனகாதரனின் சுயநல போக்கை புரிந்துகொண்ட துரைக்கண்ணுவின் இளையமகன்  கமிஷன் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு கங்காதரனுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். இது ஒரு வருடமாகவே துரைக்கண்ணுவின் குடும்பத்தில் புகைச்சலாக இருந்துவந்தது. இந்த சூழலில்தான் பிடிவாதமாக இருந்து மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பை வாங்கி, தஞ்சை வடக்கு மாவட்டம் முழுவதும் தனது நண்பர்கள் மூலம் போஸ்டர் ஒட்டவைத்து பரபரப்பாக்கினார். அதுவும் பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வீதியிலும் போஸ்டர் ஒட்டபட்டன. இருவருக்குமான விவகாரமே துரைக்கண்ணுவிற்கு மனசோர்வை உண்டாக்கி நோயாளியாக மாற்றியது. அவருக்கு குடிபழக்கமோ, புகை பிடிக்கும் பழக்கமும் என எதுவும் கிடையாது. மற்றவர்களை போல அப்படி இப்படி விவகாரமும் கிடையாது, இவர்களால் அவரது உடம்பு முடியாமலும், அதோடு கரோனாவும் சேர்ந்து மரணிக்க செய்துவிட்டது.

 

துரைக்கண்ணு இறந்ததும் எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும் அவரது குடும்பத்தினரிடம் கொடுத்த பணம் எல்லாம் யாரிடம் இருக்கு என கேட்க கனகாதரன், ஐயப்பனை நோக்கி காட்டியிருக்கிறார், ஐயப்பனோ தனக்கு தெரியாது எல்லாமே கனகாதரன்தான் எனக் கூறியிருக்கிறார். இந்த விவகாரம்தான் வீடுவரை வந்து சுடுகாடுவரை சென்றிருக்கிறது". என்கிறார்கள்.

 

Conflict in the family of Minister Durakkannu!

 

இதற்கிடையில் ஐயப்பனின் நெருங்கிய நண்பரும் மனஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவரும், பிரபல ரவுடியுமான கும்பகோணம் முருகனை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது கைதை கண்டித்து கும்பகோணம் ரவுண்டான பகுதியில் அவரது ஆதரவாளர்கள் சிலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்