Skip to main content

துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி.!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

competition tamilnadu police in kanchipuram district


தமிழக காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது. 

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்ற காவல்துறையினர், கலந்துகொண்டு தங்களது துல்லிய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்ட வீரர்கள் மாநில அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 'ரைஃபிள்' மற்றும் 'கார்பைன்' துப்பாக்கிச் சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். 
 

competition tamilnadu police in kanchipuram district


மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்ட உதவி ஆய்வாளர் மணி, காவலர் பிரகாஷ் ஆகியோர் முதல் பரிசான தங்கப் பதக்கங்களையும், ஆய்வாளர் தீபா, காவலர் குமுதா ஆகியோர் இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கங்களையும், காவலர்கள் சங்கரன், சிவராஜ் மற்றும் ரிசாத் ஆகியோர் மூன்றாம் பரிசாக வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். 

 

இப்போட்டிகளில் மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்த காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரை மேற்கு மண்டல காவல்துறை தலைவர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் பாராட்டினர்.
 

competition tamilnadu police in kanchipuram district


ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. தங்கதுரை, துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, "வரும் காலத்தில் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழக காவல்துறைக்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க தொடர்ந்து உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்" எனக் கூறி வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்