கோவை- நாகர்கோயில் இடையே நவ. 8- ஆம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு காலக்கட்டத்தில் வழக்கமாக இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை ஆகிய தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தற்போது கோவை- நாகர்கோயில் சிறப்பு ரயில் (02668) நவ. 8- ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவையில் இரவு 07.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு இரவு 08.08 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 08.52 மணிக்கும், கரூருக்கு இரவு 09.58- க்கும் சென்றடைகிறது.
பின்னர், மதுரைக்கு அதிகாலை 12.25 மணிக்கும், நெல்லைக்கு அதிகாலை 03.30 மணிக்கும், நாகர்கோயிலுக்கு அதிகாலை 05.05 மணிக்கும் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் நாகர்கோயில்- கோவை சிறப்பு ரயில் (02667), வரும் 9- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. நாகர்கோயிலில் இருந்து இரவு 09.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், வள்ளியூர், நெல்லை, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டிற்கு அதிகாலை 05.12 மணிக்கும், திருப்பூருக்கு காலை 06.03 மணிக்கும், கோவைக்கு காலை 07.15 மணிக்கும் சென்றடைகிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இந்த சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.