
சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதியிலும் சலூன் கடை மற்றும் அழகு நிலையம் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடிதிருத்தும் கடைகள் (சலூன் கடைகள்) மற்றும் அழகு நிலையங்கள் நாளை (24-03-2020) முதல் (தினமும் காலை 07.00 மணிமுதல் மாலை 07.00 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் (Containment Zones) உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களைப் பணியமர்த்தக் கூடாது.
இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இந்நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ (அல்லது) வருகின்ற வடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக் கூடாது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி (Hand Sanitiser) கண்டிப்பாக வழங்குவதையும், முகக்கவசங்கள் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமிநாசினியைத் தெளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். குளிர்சாதன வசதி இருப்பின் அதைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளைத் தனியாக வழங்கப்படும்." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் (19-05-2020) அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது நகர் பகுதிகளிலும் முடி திருத்தும் நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.