Skip to main content

அண்ணா பிறந்த தினம்: மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை! (படங்கள்)

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்ததினம் இன்று (15.09.2021) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், இன்று காலை அவரின் திருவுருவப் படத்துக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா. சுப்பரமணியன், சேகர்பாபு, ஐ. பெரியசாமி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

அண்ணா பற்றிய பேச்சு; அண்ணாமலை மீது கடுப்பான தேவர் அமைப்புகள் -  இள. புகழேந்தி விளக்கம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Ela Pugazhendi | Muthuramalinga Thevar | Annadurai | DMK

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர்களை எல்லாம் வரலாறுகளை படிக்காமல் இழிவாக அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் இந்து மத நம்பிக்கையுள்ள காந்தியை சுட்டுக் கொன்றது. இதனை வரலாற்றில் இருந்து படித்து நாங்கள் பேசுகிறோம். இருந்தும் அண்ணாமலை வேண்டுமென்றே அண்ணாதுரை அவர்களை இப்படி விமர்சித்துள்ளார். ஏன், இதற்கு தேவர் அமைப்புகளும் கூட எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால், 1956ல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தை பி.டி.ஆர் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். கூட்டத்தை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து நடத்த வேண்டாம் என முத்துராமலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். கோவில் இடம் என்பதால் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கவே இப்படி அவர் சொல்லியுள்ளார். பின்னர், அடுத்த நாள் கூட்டம் தமுக்கம் மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்றது. எனவே அண்ணாமலை, முத்துராமலிங்கம் ‘ரத்த அபிஷேகம் செய்ய சொன்னார்’ என பரப்பி அவரையும் அவமானப்படுத்துகிறார். ஆனால், அண்ணாமலைக்கும் சேர்த்து போராடியவர் தான் அண்ணாதுரை. இதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுத்து பின்னர் நிறுத்திவிட்டோம். மறுபுறம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ‘அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டிருந்தால் உன் நாக்கு அழிந்து விடும்’ என பதிலளித்துள்ளார். எனவே, நாக்பூர் கூட்டத்தின் உத்தரவில் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுகிறார். இதற்கு அமித்ஷாவும், மோடியும் கூட காரணமாக இருக்கலாம். இதனால்தான் அண்ணாமலை தமிழகத்தில் பிரச்சனையை கிளப்பி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இதனால் திமுக அவரை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறது. 

 

ஜி20 கூட்டம் என்பது சுழற்சி முறையில் நடைபெறுவது தான். ஆனால், பிரதமர் மோடி தன்னை உலகத் தலைவர் போல சித்தரித்துக் கொள்கிறார். இவர்கள் செய்தது அங்கு அருகில் இருந்த பகுதிகளை துணியை வைத்து அடைத்தது தான். சமீபத்தில் கூட கனடா சொல்கிறது, இந்திய தூதரகம் இங்கே இருக்கக் கூடாது என்று. மேலும், இந்தியா-கனடா இடையேயான ஒப்பந்தமும் முறிந்துவிட்டது எனவும் அறிவிக்கின்றனர். இதேபோல, நியூயார்க் டைம்ஸ், ‘மோடி நடத்திய ஜி20 கூட்டம் அவரின் சுய விளம்பரம். இது தேர்தலுக்கு செய்த பிரசாரம் போல தான் இருந்தது’ என்றும் விமர்சித்து செய்தி வெளியிட்டது. இப்படி உலகில் பல ஊடகங்கள் ஜி20யை விமர்சிக்கிறது. ஆனால், மோடி உறசாகமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார். இதற்கு நமது எம்.பி. திருச்சி சிவா அவர்களும் நாடாளுமன்றத்தில் தக்க விமர்சனம் அளித்திருந்தார். தொடர்ந்து, தற்போது வழங்கியுள்ள 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு கூட திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றிதான்.  சனாதனத்திற்கு எதிராக இருந்தாலும் தேர்தலுக்காக அவர்கள் இதனை செய்துள்ளனர். இதுமட்டுமின்றி மறைமுகமாக, தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்வதில், உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கியுள்ளனர். பின்னர், அந்த இடத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரை அமர்த்தி தங்களுக்கு வேண்டியதை அவர்கள் செய்வர். மேலும், தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் குறி வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் அவர்கள் எந்தவித முன் குறிப்புகளும் வழங்கவில்லை. எனவே, இந்த புதிய நாடாளுமன்றத்தில் நடக்கும் முதல் கூட்டம் ஆரோக்கியமாக எனக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் மோடியின் அரசு தான். இவ்வளவு பேசும் அண்ணாமலை ஐ.பி.எஸ். ஆனதே அன்று பெரியார், அம்பேத்கர் சேர்ந்து வலியுறுத்திய 1951 சட்டத் திருத்தம் தான் காரணம். அதைவிடுத்து இன்று சனாதனம் தான் உயிர் என அண்ணாமலை பேசுகிறார். இதற்கெல்லாம் சேர்த்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முடிவு எட்டப்படும்.

 

எடப்பாடி அவர்கள் முதல்வராக இருப்பதற்கு தகுதியில்லாதவர். அவர் பிறர் காலில் விழுந்து தானே பதவிக்கு வந்தார். மேலும், அவரின் ஆட்சியில் தான் தொடர்ந்து ஊழல் நடைபெற்றது. மாறாக, திமுக அனைவருக்கும் நன்மை செய்ய இயங்குகிறது. இதன் தொடக்கம் தான் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், தற்போது அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பதெல்லாம்.

 

அனைத்து பெண்களுக்கும் ஏன் தரவில்லை எனக் கூறி கோடீஸ்வர, வருமானவரி கட்டும், அரசு வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக சிலர் வாதிடுகிறார்கள். மாறாக சில பெண்களே முன்வந்து முதலமைச்சரை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. சீமான் போன்றோர் முனிசிபாலிட்டிக்கு கூட செல்லாமல் எதனையாவது பேச வேண்டியது. இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் நாடுதான் தமிழ்நாடு. அது ஒன்றும் தனி நாடு அல்ல. மேலும், தமிழ்நாடு கல்வி, மருத்துவம் போன்றவற்றில் முதன்மை வகிக்கிறது. எனவே, இதனையெல்லாம் அறிந்து கொள்ளாமல் சீமான் போன்றோர் பேசுகிறார்கள். 

 

நம் முதல்வரின் செயல்பாடு குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். ஆனால், சீமான் சொல்ல வருவது, கஷ்டப்படுகிற பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவி செய்யக்கூடாது என்பது போலத்தான் இருக்கிறது. இதுவே சீமானின் மறைமுக நோக்கமாக இருந்து வருகிறது. இவரின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவரின் நிலை குறித்து அறியலாம்.