ஒரு வழியாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 21 வயது யுவதி முதல் 80 வயது மூதாட்டி வரையிலும் பலர் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். நேற்று வரை துப்புரவுப் பணியாளராக இருந்தவர் இன்று அதே ஊராட்சியின் தலைவராகி இருக்கிறார். நேற்று வரையிலும் தலைவர் என கம்பீரமாக வலம் வந்தவர், காசு பணத்தை வீசினால் ஓட்டு விழும் என்று நம்பியவர், எதிராளியிடம் மண்ணைக் கவ்வியும் இருக்கிறார். இந்தத் தோல்வி, “பணம் வாங்கியவர்கள் ஓட்டுப் போடவில்லையே..” என பலரையும் புலம்ப வைத்திருக்கிறது. இந்தத் தேர்தல் திருவிழா. “நம்ம ஜாதி ஓட்டு நிச்சயம் நமக்கே விழும்..” என்று நம்பியும் பேசியும் வந்தவர்களை, “எல்லாம் போச்சே..” என்று புலம்ப வைத்திருக்கிறது.
அதிக பட்சமாக ஊராட்சித் தலைவருக்கு மாதம் ரூ.1400 தான் சம்பளம். ஆனாலும், இந்தப் பதவிக்கு ரூ.20 லட்சம் வரை செலவு பண்ணியவரும் தோல்வி அடைந்திருக்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு காப்புத் தொகை மட்டும் செலுத்தியவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். தோற்றவர்கள் சொல்வதெல்லாம், “இன்னும் கொஞ்சம் களத்துல இறங்கி வேலை பார்த்திருந்தால் ஜெயித்திருக்கலாம்..” என்பது தான். ஆனால், மக்கள் மன நிலை எப்படியும் மாறலாம் என்பதைப் பலருக்கும் இந்தத் தேர்தல் புரிய வைத்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி கிராம ஊராட்சித் தலைவர் பதவியை ஜெய்சந்தியா என்ற 21 வயதே ஆன கல்லூரி மாணவி கைப்பற்றி இருக்கிறார். அவருக்கு 1,170 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகள் பெற்றுள்ளார். ஜெய்சந்தியா, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவரது வெற்றியை ஊடகங்கள் மெச்சினாலும், அவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கெனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தவர். இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடக்கூடாது என, மகளை நிறுத்தினார்; வெற்றியும் பெற்றுவிட்டார். ஏனெனில், இவரைப் போன்றவர்களுக்கு பதவி என்பது ஒருவித போதை!
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், பணத்தை வாரியிறைத்தும் தோல்வி அடைந்திருக்கிறார். பணமே செலவழிக்காமல் பல ஊர்களில் மக்களின் அபிமானத்தால் பலரும் பதவியைக் கைப்பற்றியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் 80 வயது முதாட்டி வீரம்மாள், ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே, இரண்டு முறை தோல்வி அடைந்த அவருக்கு இப்போது வெற்றி கிட்டியிருக்கிறது. திருச்செங்கோடு ஒன்றியத்தின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுப்பணியாளராக வேலை பார்த்துவந்த சரஸ்வதி, இன்று அந்த ஊராட்சிக்கே தலைவராகி இருக்கிறார். எளியவர்கள் கையிலும் அதிகாரம் இருக்க வேண்டுமென்று, இத்தகையோருக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துபவர்களும் உண்டு. கேட்க ஆளில்லை என்பதால் சர்வாதிகாரமாக நடந்து கொள்பவர்களும் உண்டு. சுவற்றில் எறியும் பந்து போன்றது சர்வாதிகாரம். எவ்வளவு வேகத்தில் எறியப்படுகிறதோ, அதைவிட பல மடங்கு வேகத்தில் எறிந்தவர் மீதே பாயும். தோல்வியைத் தழுவியவர்களும், வெற்றி பெற்றவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். பலருக்கும் இந்தத் தேர்தல் நல்லதொரு பாடம் கற்பித்துள்ளது.