தமிழகத்தில் கரோனா நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாநகாரட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இரண்டாயிரம் மினி கிளினிக் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக முதல்வர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். அவற்றில் ஒரு சிறு சிகிச்சையகத்திற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு உதவியாளர் என நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள். மினி கிளினிக் தொடங்கப்பட்டு, அதில் மருத்துவர், செவிலியர், மருந்தாளர் என ஒரு சிறு சிகிச்சையகத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில், தற்போது மருந்தாளர்களை மட்டும் நியமனப் பட்டியலில் சேர்க்காமல் தமிழக அரசு வெளியிட்டிருப்பது, தமிழக முழுவதும் உள்ள மருந்தாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிப்பதாக மருந்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மருந்தாளர் சங்கத்தின் மூலமாக பல கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் மனுக்கள் வழங்கிவருகின்றனர். அதில் ஏற்கனவே காலியாகவுள்ள 2,500 காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். மேலும் புதிதாக கொண்டுவந்துள்ள 2,000 மினி கிளினிக்களுக்கும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். அரசாணை 82 ரத்து செய்ததை கைவிடுமாறும். மீண்டும் 9 - 4 மணி நேர வரையிலான பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். 110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துமனைகளில் தலைமை மருந்தாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். எனும் பல கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய சங்க தலைவர் சுப்பரமணி கூறுகையில், “ஆறு வருடங்களாக இத்துறையில் பணி நியமனம் என்பதே கிடையாது. தற்போது உள்ள காலி பணியிடத்தையும், மேலும் புதிதாக தொடங்குள்ள மினி கிளினிக்கும் மருந்தாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இது தொடர்பாக சுகாதரத்துறை செயலாளர், இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்துள்ளோம். இதனை பரிந்துரை செய்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையை மாற்றி அதில் மருந்தாளர்களை இணைத்து மீண்டும் அறிக்கை வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்து கிடக்கிறோம்” என்றார்.
மருத்துவர்களுக்கு நிகராக மருந்தாளர்களின் பணி மிக முக்கிய பங்குவகிக்கும் நிலையில், மருத்துவமனையில் மருந்தாளர்கள் இல்லாமல் பயணிப்பது என்பது நிச்சயமாக சிரமமானது. அப்படி இந்த அரசு நியமித்தால் பொது மக்களுக்கும், படித்த பட்டதாரிகளுக்கும் நன்மை பயக்கும்.