புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த ஐந்து வருடங்களாக பொன்னமராவதி ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைரமுத்து போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மையான அ.தி.மு.க. வாக்காளர்கள் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கே கே.செல்வகுமாருக்கு ஆதரவாக இருப்பதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி மூலம் முத்தரையர் வாக்குகளை பெற அவரை வேட்பாளர் வைரமுத்து தேர்தல் பணிகளில் முழுமையாகப் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று (03/04/2021) இரவு 10.00 மணி வரை அ.தி.மு.க. வேட்பாளருக்காக வாக்குச் சேகரித்த பழனியாண்டி இரவு 11.00 மணிக்கு வீட்டிற்கு வந்து உறங்கினார். இரவு 12.00 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு அருகிலேயே இருந்த அவரது அண்ணன் மகனான டாக்டர், பழனியாண்டியைப் பரிசோதித்தார். அதைத் தொடர்ந்து, அவர் பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
அ.தி.மு.க.வுக்காக கடுமையாகத் தேர்தல் பணிச் செய்த ஒன்றியச் செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்த தகவல் அறிந்த வேட்பாளர்கள் திருமயம் வைரமுத்து, புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் ஒரு பலத்தை இழந்துவிட்டதாக கூறுகின்றனர் கட்சியினர்.